Wednesday, October 14, 2009

நேத்திக்கடன்

வேப்பமரத்துல கட்டிருந்த ‘கறுவாயன்’ யை உத்துப்பார்த்துக்கிட்டு இருந்தான் சரவணன். அங்க வந்த அப்பத்தா கிட்ட கேட்டான்

“நாளைக்கு எனக்கு ஏன் மொட்டை போட போறோம்”

“போன வருசம் நீ மேலுக்கு சுகமில்லாம இருந்தீல அதான் அய்யா... “

“அதுக்கு இப்ப என்ன...”

“சொல்லிமுடிக்குறதுக்குள்ள அவசரக்குடுக்கபயலே” செல்லமாக சொன்னார் அப்பத்தா

“அப்ப உங்க அம்மா நேந்துக்கிட்டாளாம்”

”எந்த கோயிலுக்கு அப்பத்தா”

“நம்ம கொலசாமிடா , நம்ம கிழக்கு வயக்காட்டுக்கு மேற்கால போனா வரும்ல அந்த கோயிலுதான்”

“பெருசா மீசை வச்சிக்கிட்டு இருப்பாரே பயமுறுத்துறாப்ல...”

“டேய் கருப்ப சாமியை அப்படி சொல்லக்கூடாது, நம்ம காவ தெய்வம்”

“நைட்டு ஆனா அந்த பக்கம் விடமாட்டுறாங்களே ஏன்?”

“சாமி நடமாட்டம் இருக்கும்டா குறுக்க போக கூடாது, கோபப்பட்டு கறுப்பு அடிச்சிடும்” வாயை நெளிச்சு சுழிச்சு அப்பத்தா சொல்லும் போதே பய ஆட்டம் கண்டான்.

“சாமிக்கு என்ன அப்பத்தா வேலை”

“கருப்புவை கும்பிடுற நம்ம பங்காளி, சாதி சதனத்தையெல்லாம் குறையில்லாம காக்குறவரே அவருதான்”

”சரி அப்பத்தா, எனக்கு சுகமில்லைனு மொட்டை போடுறது சரி நம்ம கெடாவுக்கு என்ன நடந்துச்சு அத ஏன் பழிகொடுக்க போறோம்?”

அவனே தொடர்ந்தான்...

“சாதி சனத்தையும் சொந்ததையும் மட்டும் காக்குறவரு கடவுள் இல்லை பாரபட்சம் இல்லாமல் காக்குறவர் தான் கடவுள்னு எங்க டீச்சர் சொல்லி தந்தாங்க ,கோபப்பட்டு அடிக்கிறது எப்படி காக்கும் கடவுளா இருக்கும்”

“கருவாயனுக்கும் மொட்டை போட்டு திரும்ப கொண்டு வந்திடுலாம் அப்பத்தா”

“அடப்ப்போடா போக்கத்த பயலே....” திட்டிக்கிட்டே அப்பத்தா ந்கர்ந்தார்

1 comment:

  1. \\”சரி அப்பத்தா, எனக்கு சுகமில்லைனு மொட்டை போடுறது சரி நம்ம கெடாவுக்கு என்ன நடந்துச்சு அத ஏன் பழிகொடுக்க போறோம்?”\\


    nalla kelvi...very well written !!!

    ReplyDelete

நண்பர்களின் கருத்துக்கள்