Friday, October 01, 2010

எந்திரன் - விமர்சனம்

நடிகர்கள் : ரஜினி, ஐஸ்வர்யா ராய்
இசை : ஏ,ஆர், ரஹ்மான்
இயக்கம் : ஷங்கர்
தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்

ஆராய்ச்சியாளர் வசீகரன் 10 ஆண்டுகள் பாடுபட்டு ஒரு ரோபோவை (சிட்டி)வடிவமைக்கிறார். அதற்கு அவருடைய உருவத்தையே கொடுக்கிறார். இவரின் வளர்ச்சி அவருடைய குருநாதரான வில்லனுக்கு பிடிக்கவில்லை. ரஜினியை தூண்டிவிட்டு அதற்கு மனித குணநலன்களான உணர்வுகள், ஆசைகள் எல்லாம் உருவாக்க வைக்கிறார். உணர்வுகள் உண்டாகும் சகல பலம் பொருந்திய ரோபோவை போர்முனைக்கு பயன்படுத்த ஆசைப்படுகிறார் வசீகரன். ஆனால் எதிரி நாடுகளிடம் விற்க ஆசைப்படுகிறார் வில்லன். வசீகரனின் காதலி சனா (ஐஸ்) மீது ரோபோவிற்கு காதல் பொங்கி வழிய அதை அழிக்கின்றார் வசீ. மீண்டும் அதை உருவாக்கி அதனை அழிவுப்பாதைக்கு திருப்புகிறார் வில்லன். காதல் பித்து பிடிக்கும் ரோபோ என்னவெல்லாம் செய்கிறது ஒரு பெண்ணிற்காக என்பதே கதை. இறுதி வெற்றி யாருக்கு மனிதனா? ரோபோவா?

ரஜினிக்கு சயிண்டிஸ்ட் வேடம் பொருந்தவில்லை என்றே தோன்றுகிறது. ஆனாலும் ஆள் ரெம்ப ஸ்மாட்ர்ட் இளமையாக இருக்கிறார்.  அவருடைய உதவியாளர்களா சந்தாணம் மற்றும் கருணாஸ் சும்மா மொக்கை போடுகின்றனர். சயிண்டிஸ்டுக்கு படத்தில் பாடல் பாடுவதை தவிர வேறு ஹீரோயிசம் இல்லை. ரெம்ப சாதுவாக காட்சிகள் உள்ளது. அவர் உருவாக்கும் ரோபோ ரஜினி செம ஸ்மார்ட். மனுசன் பின்னுகிறார். நல்ல உடல் மொழி லாவகமான நடிப்பு என சகலமும் ஸ்கோர் செய்கிறார் ரோபோ ரஜினி. விஞ்ஞானியின் காதலியாக ஐஸ் , 36 வயசிலும் நல்லாத்தான் இருக்கார். நல்லா நடிக்கவும் செய்கிறார். ஆனாலும் நேட்டிவிட்டு ஒட்டவில்லை.

முதல் பாதியில் விஞ்ஞானியின் காதலும் , ரோபோவின் அட்டகாசங்களுமாக போகிறது. இரண்டாம்பாதியில் ரோபோ வில்லனாகி ஐஸை கடத்தை கொஞ்சம் சூடு பிடிக்கிறது, ஆனாலும் இழுவையான பேசும் காட்சி அமைப்புகள் செம போர் டயலாக் ரெம்ப போர். ஆத்தோ ஆத்துனு ஆத்துகின்றார்கள் ஆளாளுக்கு.

இரண்டாம் பாதியில் கடைசி 30 நிமிடங்கள் உச்சகட்ட கிராபிக்ஸ் அதுவே கொஞ்சம் திகட்டுகிறது எங்கு பார்த்தாலும் ரஜினி. மேலும் டெக்னிக்கல் வசனகங்கள் பெரும்பாலும் வலுவில்லை. ஏனோ தானோ என்றே இருக்கிறது சுஜாதா இல்லாதது அப்பட்டமாக தெரிகிறது.

ரோபோவின் சாகசங்களும் காட்சிகளும் நல்ல வடிவமைக்கு. இறுதிக்காட்சி கிராபிக்ஸ்களும் கலக்கல். டிரைலரில் பார்த்த சீன்களே படத்தில் பார்க்கும் பொழுது வேறு பரிணாமத்தையும் நம்முடைய காட்சிப்பிழையையும் சுட்டிக்காட்டுகிறது.

ஏ.ஆர்.ஆர் அசத்திருக்கார். கிராபிக்ஸ் டீம் நல்ல திறமையான வடிவமைப்புகளில் பின்னிருக்காங்க. ரத்னவேலுவின் கேமரா அருமை. ரோபோவை டிஸ்மாண்டலிங் பண்ணும் போது நல்லா இருக்கு இரண்டு தடவையும்.

இறுதிகாட்சிகளில் எங்கு நோக்கினும் ரஜினி என்பதால் ஆர்வம் ஏற்பட்டு பின்பு அதுவே சலிப்பை கொடுக்கிறது.

ரயில் காட்சியும் இறுதிக்காட்சிய்யும் தவிர பெரிய சுவாரஸ்யம் இல்லை. ரஜினி ரசிகன் எதிர்ப்பார்க்கும் ஹீரோயிச காட்சிகளும் இல்லை.

ரோபோ திரையரங்குகளில் மட்டுமே ரசித்து காண முடியும்.

ரோபோ போரோ என்றே தோன்றுகிறது.

Saturday, September 18, 2010

எந்திரன் ரிலீஸ் தேதி

சூப்பர் ஸ்டார் மற்றும் ஐஸ் நடிக்க, சங்கரின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் எந்திரன் வரும் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி 3 கெட்டப்புகளில் தோன்றுகிறார். சிவாஜில் மொட்டை போட்ட ரஜினி வருவது போல இதிலும் கடைசி 45 நிமிடங்கள் வேறு கெட்டப்பில் வருகிறார்.

1 ஆம் தேதி பார்ப்போம் விமர்சனங்களுக்கு....

Friday, August 20, 2010

நான் மகான் அல்ல விமர்சனம்

நடிப்பு: கார்த்தி , காஜல் அகர்வால் , ஜெயபிரகாஷ்
இயக்கம் : சுசீந்திரன்
இசை : யுவன்

போதையில் தடம் மாறிப்போகும் கல்லூரி மாணவர்கள் செய்யும் இரட்டைக்கொலைக்கு சாட்சியான நாயகனின் தந்தையை மாணவர்களே போட்டுத்தள்ள மாணவர்களை கருவறுக்க நாயகன் செல்கிறார். என்ன முடிவு என்பதே கதை.

சுசீந்திரன் முதல் படமாகிய வெண்ணிலா கபடிக்குழுவிற்கு பிறகு இயக்கி இருக்கும் இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நகரத்து கதைக்களம். நாயகன் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஜாலியான இளைஞன் ஜீவாவாக கார்த்தி. அவர் ஆரம்பம் முதல் இடைவேளை செய்யும் சேட்டைகளும் , நையாண்டிகளும் இளைஞர்களின் வாழ்க்கையை கண் முன் நகர்த்துகிறது அதுவே முதல் பாதி விறுவிறுப்புக்கு உதவி செய்கிறது. ஆரம்ப காட்சிகளிலே நாயகியை காட்டிவிடுவதால் ஏதோ பெருசா கதைக்களம் இருக்கும் என்று தோன்றியது ஏமாற்றமே.கார்த்தி நன்றாக நடிக்கிறார், சண்டடை போடுகிறார் அதைவிட பருத்திவீரனில் இருந்து நான் மகான் அல்ல வரைக்கும் தொடரும் நக்கலும் நையாண்டியுமே அவருக்கு பலம். இயல்பாக பொருந்துகிறது அவருக்கு.

மிடில் க்ளாஸ் குடும்ப பிண்ணனி , கால் டாக்சி டிரைவர் மற்றும் நல்ல அப்பாவாக ஜெயபிரகாஷ் கிடைச்ச சின்ன கேரக்டரிலும் ஸ்கோர் செய்கிறார். காஜல் அகர்வால் ஒரு டூயட் ஒரு ஆரம்ப பாடலுக்கு பயன்பட்டிருக்கிறார் இடைவேளைக்கு அப்புறம் வரவே மாட்டேங்குறார். பொண்ணுக்கு நடிக்க ஸ்கோப் இல்லாத கேரக்டர். அழகாக இருப்பதால் தப்பிக்கிறார். இடைவேளைக்கு பிறகு என்ன ஆனார் எங்கே போனார் என்கிற விவரம் இல்லை.80ஸ் படங்கள் போல கடைசியில் எண்ட் கார்ட் போடும் போதாச்சும் காட்டிருக்கலாம்.

காமெடிக்கு கார்த்தியுடன் உறுதுணையாக இருப்பவர் வெண்ணிலா கபடிக்குழுவில் 50 புரோட்டா சாப்பிடுவாரே அவர்தான். இயல்பான பேச்சு மற்றும் உடல் மொழியால் கவர்கிறார்.

ஐந்து பசங்க சேர்ந்து சென்னையின் ஒதுக்குப்புற கடற்கரை ஏரியாவிற்கு வரும் காதலர்களை மிரட்டி அடித்து பெண்களை கவர்கின்றனர். காம வெறியில்  நண்பனின் காதலியையும் , நண்பனையும் போட்டுத்தள்ளுகின்றனர். விடலை பசங்கள் தான் என்றாலும் இருவர் நடிப்பில் கவர்கின்றனர். அந்த தாடிக்கார பையனும் , பரட்டைத்தலைப்பையனும்.

நாயகனுக்கு காமெடி தவிர ஸ்கோப் செய்யும் காட்சிகளும் இல்லை என்பதால் அடக்கி வாசித்து உள்ளார். இறுதி சண்டையில் சும்மா ரவுண்டு கட்டி அடிக்கிறார். காஜல் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றதும் நேரே வீட்டிற்கே சென்று காதலை காஜலின் தந்தையிடம் சொல்வது, காஜலை கரெக்ட் செய்ய பொய்யான காதல் தோல்வியை சொல்வது, வேக்கிள் ரெக்கவரில வேலைக்கு சேர்ந்து மேனஜரையும் அவரது மனைவியையும் சண்டை போட வைப்பது போன்று நகைச்சுவை காட்சிகளே அதிகம் அதற்காகவே படம் பாக்கலாம். முதல் பாதியில் நிறைய டைமிங் காமெடிகள்.

இரண்டாம் பாதியில் படம் பொசுக்குனு முடியுற மாதிரி இருக்கும். மொத்தம் 2 மணி நேரமே .

பாடல்களிலும் , பிஜிஎம்மிலும் யுவன் ராஜ்ஜியம்.

வா வா நிலவை, பாடல் அருமை. ஒரே ஒரு டூயட் அதுவும் அருமை .

நல்ல நகைச்சுவை கலந்த திரைக்கதை , இசை மற்றும் கார்த்தியின் ஈடுபாடு படத்தை காப்பாற்றும்.

நான் மாகன் அல்ல டைட்டிலுக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை.

Friday, August 06, 2010

அடோப் என்கோர் சிஎஸ் டிவிடி மற்றும் ப்ளூரே உருவாக்கம் பகுதி-2

சென்ற பகுதியில் முன்னுரை பார்த்தோம் இந்த பகுதியில் மென்பொருள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்

அடோப் என்கோரினை திறந்தம் கீழ்வரும் திரை தோன்றும்


மேலே உள்ள படத்தில் காணுங்கள் இது தான் முதல் திரை தோன்றும்

இங்கு
1. சமீபத்திய புராஜக்ட்டுகளை காட்டும்
2.புதிய புராஜக்ட் தொடங்க
3.பழைய புராஜக்ட்டுகளை திறக்க

இதில் புதியதை தேர்வு செய்தால் பின்வரும் திரை தோன்றும்.

புதிய புராஜக்ட்டுக்கான செட்டிங்க் திரை . இங்கே புராஜக்ட்டின் பெயர், சேமிக்க வேண்டிய இடம் மற்றும் புராஜக்ட்டின் வகை.  அதாவது ப்ளூரே / டிவிடி. மேலும் வீடியோவின் பண்பு அதாவது pal / ntsc  வகை. கொடுத்து ஓக்கே கொடுங்கள் பின்வரும் திரை தோன்றும்.


மேலே உள்ள திரைதான் வேலை செய்யக்கூடிய முழுத்திரை அதிலே சில குறிப்புகளை தந்துள்ளேன்.

இடது புறம் புராஜக்ட் என்னும் டேபின் கீழ் நாம் நம்முடைய புராஜக்ட்டுக்கு தேவையான வீடியோ/ஆடியோ மெனுக்களை இணைத்து வைத்துக்கொள்ளலாம். அவ்வாறு இனைக்கப்பட்ட புராஜக்ட்டின் சொத்துக்கள்(அசெட்) இங்கே காட்டப்படும்

அதற்கு கீழே டைம் லைன் எனப்படும் பகுதி இங்கே அசெட்டில் இணைத்த வீடியோ / ஆடியோவினைக்கொண்டு ஒரு டைம்லைன் உருவாக்கலாம். இதே போல புராஜக்ட்டின் கொள்ளளவிற்கு ஏற்ற எத்தனை டைம் லைன்களையும் உருவாக்கி கொள்ளலாம்.

ஒரு படத்திற்கு ஒரு டைம் லைன் எனும் விகிதத்தில்

ப்ரிவியூ ஸ்க்ரீன் எனும் இடத்தில் டைம் லைனை இயக்கி பார்க்கலாம்.

ப்ராப்பர்ட்டி விண்டோவில் மேற்பகுதியில் டிஸ்க் என்று உள்ளது எனவே இந்த பண்புகள் பகுதி ஒரு டிவிடி புராஜக்ட்டிற்கு உரிய பண்புகள்
அதாவது first play எது title பட்டனை ரிமோட்டில் அழுத்தினால் எந்த மெனு தோன்ற வேண்டும். போன்றவற்றை தீர்மானிப்பது.

அதற்கு கீழே லேயர் எனும் பகுதியில் நாம் இணைத்துள்ள போட்டோஷாப் மெனுக்களின் லேயர்கள் காட்டப்படும். அதாவது குறிப்பிட்ட மெனுவினை தேர்வு செய்தால் அதனுடைய லேயர்கள் காட்டப்படும்.

இந்த ப்ராப்பர்ட்டி விண்டோ நாம் தேர்வு செய்யும் ஒவ்வொரு அசெட்டுக்கும் தனித்தனியானது. எனவே தேர்வு செய்யும் அசெட்டை பொருத்து அதில் உள்ள பகுதி குறிப்புகள்(ப்ராப்பர்ட்டியின் வகைகள்) காட்டப்படும்.

புராஜக்ட்டில் அசெட்டுகளை இணைக்க மேலே படத்தில் காட்டியுள்ள படி அந்த பகுதியில் ரைட் க்ளிக் செய்யவும் தோன்றும் மெனுவில் இம்ப்போர்ட் அஸ் என்பதில் தேவையானதை தேர்வு செய்து இணைக்கலாம்
1.அசெட் - வீடியோ/ஆடியோ
2.மெனு - போட்டோஷாப் வகை பைல்
3.பாப்-அப் மெனு - ப்ளுரேவிற்கு உரியது
4.டைம்லைன் - வீடியோ/ஆடியோவை இணைத்து செய்யப்படும் டைம்லைன்
5.ஸ்டைட் ஷோ - ஸ்லைட் ஷோக்களை கொண்டு வரலாம்.

Saturday, July 17, 2010

அடோப் என்கோர் சிஎஸ் 4 - டிவிடி மற்றும் ப்ளூரே டிஸ்க் உருவாக்கம் பகுதி -01

நண்பர்களே,

வணக்கம், ஏற்கனவே தொழில் முறை டிவிடி உருவாக்கத்தில் டிவிடி மேஸ்ட்ரோ ஸ்ப்ரூஸை பற்றி விரிவாக விளக்கியுள்ளேன். இங்கே மீண்டும் ஒரு டிவிடி/ப்ளூரே டிஸ்க் உருவாக்கம் பற்றி விளக்க போகின்றேன் . இப்பொழுது பயன்படுத்தப்போகும் மென்பொருள் இன்றைய நிலவரத்தில் முன்னனியில் இருக்கும் அடோப் என்கோர் டிவிடி . இதில் தற்போதைய வெர்சன் சிஎஸ்5. என்னிடம் இருப்பது சிஎஸ் 4 அதனை பின்பற்றி விளக்குகிறேன். பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன்.

இணையத்தில் தேடியதில் இது தான் கிடைத்தது சைனிஸ் எழுத்துக்களை கண்டு மிரள வேண்டாம் என்னிடம் உள்ள வெர்சன் ஆங்கிலமே அதனை கொண்டே மேலதிக விவரங்கள் தரப்போகிறேன்.

இது அடோப் நிறுவனத்தில் மென்பொருள் பெரும்பாலும் ப்ரீமியர் எனும் வீடியோ எடிட்டிங் மென்பொருளுடன் சேர்ந்தே வரும். இதனுடைய சிறப்பம்சங்கள் என்று பார்த்தால்

*எளிதான அணுகுமுறை மேஸ்ட்ரோ போல கடினம் இல்லை
*மிகவும் வேகமான டிவிடி பில்ட்
*தவறுகளை டிவிடி பில்ட் செய்யும் முன்னே கண்டுபிடித்து சரிசெய்துகொள்ளலாம்.
*ப்ளூ ரே டிஸ்க் உருவாக்கலாம்
*ஏசி3 ,டிடிஎஸ் , பிசிஎம் வேவ் போன்ற ஆடியோ பார்மட்டுகளையும் ஏற்றுக்கொள்ளும்
*சப்டைட்டில் சேர்க்கலாம்
*மெனுவினை நேரடியாக போட்டோஷாப்பில் இருந்து லேயர்களாக கொண்டு வந்து இங்கு சேர்க்கலாம்
*லேயராக இருப்பதால் பட்டன்கள் அமைப்பு எளிதாகிறது.
*ப்லோ சார்ட் வடிவில் இணைப்புகள் காட்டப்படுதால் தவறுகளை கண்டுபிடிக்க எளிதாக உள்ளது
*மென்பொருளிலே டிவிடி/ப்ளூரே பர்ன் செய்யும் வசதி
*அப்டேட் உள்ளது, மிகவும் எளிதான் ஹெல்ப் பிடிஎஃப் பார்மட் இணையத்தில் அவர்களுடைய அகப்பக்கத்திலே இருக்கிறது.

குறைகள்:

*ஸ்க்ரிப்ட் வகை சப்டைட்டில் பார்மெட் மட்டுமே சப்போர்ட் செய்கிறது
*சில வகையான ப்ளேயர்களில் ஆடியோ லாங்குவேஜ் சரியாக காண்பிப்பதில்லை
*டிவிடி 9 க்குரிய டபுள் லேயர் ப்ரேக் எனும் ஆப்சனை பில்ட் நேரத்தில் வைத்திருப்பது சரியாக இல்லை.
*ஒரு முறை இணைத்த பைலை மீண்டும் இணைக்கையில் முழுவதும் செக் செய்கிறது ரெபரன்ஸ் பைல் வைத்துக்கொள்வதில்லை.
*புராஜக்ட்டில் assets இனைக்கும் பொழுது அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.

அடுத்த பகுதியில் இருந்து என்கோரை பிரிச்சு மேயலாம்.

Friday, February 26, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - விமர்சனம்

நடிப்பு : சிம்பு , த்ரிஷா மற்றும் சிலர்
இயக்கம் : கௌதம் வாசுதேவ மேனன்
இசை :ஏ.ஆர்.ரஹ்மான்

த்ரிஷாவின் திருமணம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் படம் ஆரம்பிக்கிறது. சிம்புவின் பார்வையில் படம் சொல்லப்படுகிறது.

கார்த்திக்(சிம்பு) மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் முடித்து சினிமா ஆசையில் இயக்குநர் ஆக வேண்டும் என்று கனவோடு இருப்பவர். போலரிஸில் மென்பொருள் பணியில் இருக்கும் ஜெஸ்ஸி(த்ரிஷா) மலையாள கிறிஸ்துவக்குடும்ப பெண். ஜெஸ்ஸியின் வீட்டின் கீழ்த்தளத்தில் குடிவருகிறார்கள் சிம்பு குடும்பத்தினர்.

அங்கு த்ரிஷாவை கண்டவுடன் காதல் கொள்கிறார். அதை வெளிப்படுத்த துடிக்கிறார். சில இடைஞ்சல்கள் த்ரிஷா சிம்புவை விட ஒரு வயது மூத்தவர்,த்ரிஷாவின் அப்பாவிற்கு தன் மகளை ஒரு கிறிஸ்துவப்பையனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம்.

இவையெல்லாம் எடுத்துச்சொல்லியும் சிம்பு காதலில் உறுதியாக இருக்கிறார். த்ரிஷாவை தேடி கேரளா வரைக்கும் செல்கிறார். அந்த உருகலில் த்ரிஷா காதல் கொள்கிறார் ஆனால் வெளிப்படுத்த மறுக்கிறார். இந்த காதலினால் வலி தான் அதிகமாம் எனவே வேண்டாம் என்று மறுக்கிறார்.

இவர்களின் பழக்கம் த்ரிஷாவின் அண்ணனுக்கு தெரியவர அது கைகலப்பில் முடிய இரு குடும்பங்களும் இடையே பிரச்சினை ஏற்பட்டுவிடுகிறது. அப்பொழுது தான் த்ரிஷா தன் காதலை வெளிப்படுத்துகிறார் கோபத்தில்.


பெண்களுக்கே (காதலில்)ஏற்படும் முட்டாள் தனமான கோபத்தால் த்ரிஷா சிம்புவை பிரிகிறார்.

த்ரிஷாவை பிரிந்த வலியில் இருக்கும் சிம்பு தனது காதல் கதையே சினிமாவக எடுக்கிறார்.  படப்பிடிப்பின் போது த்ரிஷாவை சந்திக்கிறார். த்ரிஷாவிற்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று தெரிந்தது சிம்பு , த்ரிஷா கல்யாணம் செய்துகொண்டு முதல் படமும் வெளியாகிறது. சிம்பு-த்ரிஷா என்ன ஆனார்கள்.....

க்ளைமாக்ஸ் இயக்குநரின் , காதலியின் பார்வையில் சொல்லப்பட்டிருப்பதால் இரட்டை க்ளைமாக்ஸ் போல தெரியும் ஆனாலும் நல்ல க்ளைமாக்ஸ். வித்தியாசம் தான் ஆண்டி க்ளைமாக்ஸ் என்றாலும்.

சிம்பு அடக்க ஒடுக்கமாக நடித்துள்ளார் கொஞ்சம் ஸ்மார்டாக இருக்கிறார், சாதரண மிடில் க்ளாஸ் வாலிபனாகவே வாழ்ந்துள்ளார். த்ரிஷா நிஜமாகவே கனவு தேவதை தான் த்ரிஷாவை இவ்வளவு அழகாக யாரும் காட்ட முடியாது. சிம்பு கூட இருக்கும் நண்பராக வரும் நபர் பெயர் தெரியவில்லை ஆனால் படத்தில் அவர் காக்க காக்க கேமரா மேன் கணேஷ் என்று காட்டப்படுகிறார்.

சிம்பு - த்ரிஷா - கணேஷ் இந்த மூவர் மட்டுமே படம் முழுவதும் வியாப்பித்துள்ளனர். வேறு சில நடிகர்கள் இருந்தாலும் சில காட்சிகள் மட்டுமே. சிம்புவின் ப்ரண்ட்ஸ் வட்டம் என்று தனிப்பட்டு காட்டப்படவில்லை என்பதால் சிறிது நகைச்சுவை தேக்கமே வாரணம் ஆயிரம் போல்.

சிம்பு - கணேஷ் த்ரிஷாவை தேடி கேரளா போவதும் த்ரிஷாவின் கல்யாணத்திற்கு போவதும் நல்ல காமெடி.

முதல் பாதி நன்றாக போகிறது த்ரிஷா பிரிந்து சென்ற பின்னர் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு. சினிமாத்தனமான பில்டப் இல்லாத காதல் காட்சிகளும், காதல் பிரிவும். க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் சினிமாத்தனம் என்றாலும் ரசிக்க முடிகிறது. காதல் பிரிவை கொடுமையாக சித்தரித்த தமிழ் சினிமாவில் இந்த நடைமுறை காதல் பிரிவும் வித்தியாசமே.

பாடல்களில் ஏ.ஆர்.ஆர் பின்னிருக்கார். பிஜிஎம் ஏனோ ஆங்கில பாடல்களின் தொகுப்பு போலவே இருக்கிறது. பாடல்கள் அருமையோ அருமை...

பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் சூப்பர்ப்.

கேமரா நன்றாக கையாண்டுள்ளார். நிறைய க்ளோசப் ஷாட்டுகள் மூலம் த்ரிஷாவை(பெண்களுக்கு சிம்பு) ரசித்து ஏற்க வைத்துள்ளார்.

எடிட்டிங் ஆண்டனி சொல்லவா வேணும் நல்லாவே இருக்கு கேரள படகு பயணத்தில் கேமரா பயணிக்க அந்த தண்ணீரிலே பெயர் போடப்படுவது அழகு.

கௌதம் சொந்த கதையை படமாக்கிருப்பாரோனு தோனுது. நாகரீகமான மெச்சூரானா , நடுத்தர குடும்பத்து காதல். ஆபாசம் இல்லா அநாகரிகம் இல்லா காட்சிகள் குடும்பத்துடன் சென்று பார்க்கவைக்கும் முகம் சுழிக்க வைக்கா காட்சிகள். இந்த முறையை தன்படங்களில் கௌதம் எப்பொழுதும் பின்பற்றுகிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா - தேவதையின் வெளிச்சம்

நண்பர்கள் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Monday, February 08, 2010

ரசித்து பார்க்கும் 200 டாலர் கொலை

சீனாவில் உள்ள ஒரு வனப்பகுதி மிருககாட்சி நிலையத்தில் பின்வரும் கொடுமை நடக்கிறதாம். ஒரு மாட்டை 200 டாலருக்கு வாங்கி இந்த கொலையை ரசிக்கின்றனராம் வெளிநாட்டினர்.


மனித மனத்தின் ரசிப்புத்தன்மை எங்கேயோ போயிடுச்சு....

Thursday, February 04, 2010

அசல் - பழைய படங்களின் நகல்


நடிப்பு: அஜித் , பிரபு , சமீரா ரெட்டி ,  பாவனா , சுரேஷ் , யூகி சேது, சம்பத் , ராஜீவ் கிருஷ்ணா.
இசை : பரத்வாஜ்
இயக்கம் : சரண்
தயாரிப்பு : சிவாஜி பிலிம்ஸ்

கதை:

ப்ரான்ஸில் வசிக்கும் ஜீவானந்ததின்(அப்பா அஜீத்) மனைவியின் மகன்களுக்கும் , அவருடைய இல்லீகல் மனைவியின் மகனுக்கும்(மற்றொரு அஜீத்) நடக்கும் போட்டியில் யார் அசல் வாரிசாக இறுதியில் ஜெயிக்கிறார்கள் என்பதே.

ஜீவானந்தம் பல்வேறு நாடுகளுக்கு சட்டப்படி ஆயுதம் ஏற்றுமதி செய்யும் யுரோசியா எனும் நிறுவனத்தை நடத்துகின்றார் அவரது மகன்களாக சம்பத் மற்றும் ராஜூவ் கிருஷ்ணா. அவரது மற்றொரு மகன் சிவாவாக மற்றொரு அஜீத். ஜீவானந்தம் , சிவாவை நம்பி மட்டுமே பொறுப்புகள் கொடுக்க மிச்ச இரண்டு மகன்களுக்கும் கோபம். ஜீவானந்திற்கு பிடிக்காத இல்லீகல் ஆயுத பிசினஸ் செய்ய முற்படுகின்றனர் இருவரும். இந்நிலையில்  ஜீவானந்தம் மகன்களால் கொல்லப்படுகிறார். ஆயூத கடத்தலில் ஏற்படும் போட்டி காரணமாக ராஜீவ் கிருஷ்ணாவை மும்பையில் இருக்கும் கும்பல் கடத்துகிறது. அவரை விடுவிக்க அஜீத் மும்பை பயனமாகிறார். அவருடன் அவருடைய உதவியாளர் சமீராவும் மும்பை செல்கிறார். சமீராவுக்கு அஜித் மேல் காதல்.

மும்பையில் ஜீவானந்ததின் நண்பரான பிரபுவின் பாதுகாப்பில் இருக்கின்றனர். பிரபுவிடம் வேலை பார்க்கும் பாவனாவும் கண்டவுடன் காதல் கொள்கிறார். மேலும் பிரபுவிடம் வேலைபார்க்கும் டான் சமோஷா பேரைப்படித்தாலே காமெடி பீஸூனு தெரியுது தானே ஆமாம் கதையின் சொந்தக்காரரான யூகி சேது. அவருக்கு இரண்டு அடிப்பொடிகள் ஜீரா , சட்னி என்ற நாமகரணத்துடன்.
இவர்கள் செய்யும் சேட்டைகள் சிறிது சிரிப்பை வரவழைக்கின்றன.

இடையே பாவனா இரண்டு டூயட்டும், சமீரா ஒரு டூயட்டும் முடிக்கின்றனர். மும்பை கும்பலில் இருந்து ராஜீவ் கிருஷ்ணாவை மீட்டும் திரும்பும் போது அஜீத்தை போட்டு தள்ளுகின்றனர் ராஜீவும், சம்பத்தும். போட்டாச்சு இண்டர்வெல்.

பேக் டூ பாரீஸ் ஏன் அஜித்தை  கொலை செய்ய முயற்சித்தார்கள்? அவர்களை அஜீத் எப்படி பழி வாங்கினார் என்பது தான் மிச்ச சொச்சம்.

வழக்கமான ப்ழைய காலத்து காட்சி அமைப்புகள். மும்பை என்று சொல்லிவிட்டு அதைக்கூட மலேசியாவில் படமாக்கியுள்ளனர். பாரீஸையும் அறிமுக கேமராமேன் அற்புதமாக படமாக்கியுள்ளார். வில்லன் போலீஸாக வரும் சுரேஷ்(பழைய நதியா சுரேஸே தான்) கடைசியில் திருந்துவது அக்மார்க் தமிழ் சினிமா.

சமீரா, பாவனா முன்னவர் குதிரை பின்னவர் மான் குட்டி. ஆனாலும் மான் மனதில் ஒட்டிக்கொள்கிறது. அசடாக நடித்துள்ளார் பாவனா.

இசை பரத்வாஜ் இன்னும் அப்படியே தூங்கிகிட்டு இருக்கார். ஒன்னுமே சரியில்லை பிஜிஎமெல்லாம். பாட்டு 2-3 தேறுது.

ஆண்டனியின் படத்தொகுப்பு நல்லா இருக்கு.

சரன் இனிமேலாச்சும் பழைய கதை, பழைய சீன்கள் , பழைய திரைக்கதையை விடுங்க ப்ளீஸ். சரனும் பரத்வாஜ்ஜூம் கொஞ்சம் இல்லை இல்லை நிறைய மாறனும். ஜெயித்த கூட்டணி என்பதற்காக ஜெயித்த கதைகளையும் காட்சி அமைப்புகளையும் அடுக்குவது ஆவ்வ்வ்வ் சொல்ல வைக்குது. காட்சிகள் அனைத்தும் முன் கூட்டியே யூகிக்க வைக்கின்றன.

அசல் பழைய காட்சிகளின் நகல்

Thursday, January 21, 2010

ஆயிரத்தில் ஒருவன்

இந்த திரைப்படத்தின் விமர்சனம் ஏற்கனவே நிறைய தளங்களில் அலசி அடித்துப்போடப்பட்டிருக்கு இருந்தாலும் எனக்கும் எழுத கிடைத்த ஒரு வாய்ப்பாக விமர்சனம் செய்கின்றேன். நேரம் இல்லாத காரணத்தால் இந்த தாமத விமர்சனம்.
நடிப்பு: ரீமாசென் , கார்த்தி ,ஆண்ட்ரியா மற்றும் மிகப்பெரிய கூட்டமே இருக்கிறார்கள்  
இயக்கம் : செல்வராகவன்  
இசை : ஜிவி பிரகாஷ்  
தயாரிப்பு : ரவீந்திரன்  


தெருக்கூத்தில் ஆரம்பிக்கிறது கதை 1279 ல் சோழப்பேரரசு , பாண்டிய பேரரசுவிடம் வீழ்வதாக காட்டப்படுகிறது. அந்த சமயத்தில் சோழர்களின் வாரிசை காப்பாற்ற ஒரு கூட்டமாக சோழர்கள் வெளியேறுகிறார்கள் செல்லும் பொழுது பாண்டியர்களிடமிருந்து கைபற்றிய பாண்டியர்களின் குல தெய்வ சிலையை கொண்டு செல்கின்றனர். செல்லும் சோழர்கள் தென்கிழக்கே வியாட்நாம் அருகே உள்ள ஒரு தீவில் இருப்பதாக தெரிகிறது ஆனால் அவர்களை யாரும் எளிதில் சென்று சேரா வண்ணம் 7 வகையான ஆபத்தினை உருவாக்கி வைத்து விட்டு செல்கின்றனர் சோழர்கள். தூது வரும் வரை அந்த தீவிலே காத்திருக்க உத்தரவு. 


தற்காலத்தில் அந்த சோழ இனத்தவரை தேடி ஆராய்ச்சியாளர்களின் பயணம் இருக்கிறது அதில் காணாமல் போன பிரதாப்போத்தன் ஆண்ட்ரியாவின் தந்தை. ஆண்டிரியாவும் ஒரு தொல்பொருள் ஆராய்ச்ச்சியாளர். ரீமா சென் என்னவா இருக்காருனு சொல்லப்படவில்லை அவர் தலைமையில் ஒரு குழு அந்த இளவரசன் வாழ்ந்த இடத்தை காண செல்கிறது. அந்த குழுவில் ஆண்டிரியாவும் இணைகிறார். இவர்கள் குழுவிற்கு உதவியாக எடுபிடி வேலை செய்யும் குழுவின் தலைவனாக கார்த்தி. கார்த்தி ஒரு எம்ஜிஆர் ரசிகர் என்று காட்டப்படுகிறது. ஆரம்ப காட்சிகளில் பின்புலத்தில் ஒரே எம்ஜிஆர் பாடல்களே ஒலிக்கிறது.  


கார்த்தி சவுண்ட் விடுவதும் , சைட் அடிப்பதுமே முழு நேரமாக செய்கிறார். அதிலும் ரீமா/ஆண்ட்ரியாவினை பார்க்கும் போது அவரின் பார்வையையே சென்சார் செய்யலாம் எனும் அளவிற்கு இருக்கிறது. 
முதல் ஆபத்து கடலில் தோன்றும் ஒரு வித்தியாசமான பிராணி(?) யால் அதில் சிலர் இறக்கின்றனர்.  


இரண்டாவது ஆபத்து செவ்விந்தியர்களால் அவர்களையும் சுட்டு சாய்க்கின்றனர் அதிகமான ரத்தம் இந்த காட்சிகளில் . இங்கே இந்த காட்சியை 5 நிமிடம் கூட இல்லாமல் சுத்தமாக வெட்டி விட்டனர் சென்சாரில் ஆனாலும் பார்த்துட்டோம்ல.  


மூன்றாவது ஆபத்து தங்குமிடத்தில் ஏராளமான பாம்புகள் படையெடுத்து நாசம் செய்கிறது. இந்த இடத்தில் தப்பிக்கும் முயற்சியில் கார்த்தி‍‍ + ரீமா + ஆண்ட்ரியா மூவரும் மற்றவர்களிடம் இருந்து தனித்துப்பிரிகின்றனர். இந்த பொண்ணுங்க ஆங்கில கெட்டவார்த்தைகளை எல்லாம் சரளமாக பேசுகின்றனர் அதை சென்சார் செய்தாலும் நன்றாகவே கேட்க முடிகிறது. மூவரும் பாலைவனத்தை கடக்கின்றனர் பசி தாகத்துடன்.  


மூவரும் ஒரு சதுப்பு நிலம் போன்ற இடத்தில் செல்கின்றனர் இங்கே கண்ணுக்கு அறியா புதைகுழிகள் ஏராளம் அதை எப்படி கடப்பது என்று ஆர்க்கியாலஸிட் ஆண்ட்ரியா கண்டுபிடிக்கிறார் ஓலைச்சுவடிகள் மூலம். நல்ல ரசனையான கண்டுபிடிப்பு மேலும் இந்த இடத்தில் பேக்கிரவுண்ட் இசை அருமை. என்ன யுவன் இருந்தால் இன்னும் மெனக்கெட்டிருப்பார்.  


அடுத்த ஆபத்தாக கிராமம் சோழர்கள் வாழ்ந்த இடத்தை கண்டுபிடித்தாக பெருமைப்படுகின்றன்ர் அங்கே ஒரு பாட்டு ஒம்மேல ஆசை தான் பாட்டு. அந்த பாட்டு எடுக்கப்பட்டிருக்கும் இடம் அருமையான லொகேசன் படத்தின் கதைக்கு நல்ல வழு சேர்க்கும் இடம். பாடல் முடிந்த உடன் இருக்கும் காட்சி அருமையோ அருமை. அதாவது அந்த இடத்தை கடப்பவர்களுக்கு சூணியம் வைத்தது போல பைத்தியம் பிடித்து தன்னிலை மறப்பர். இந்த காட்சியில் மூவரும் நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருப்பாங்க. 


அந்த சுயநினைவில்லா நிலையில் சோழர்களின் இடத்தை அடைகின்றனர். அங்கே அவர்களுக்கு அதிர்ச்சி இன்னும் சோழர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதை பார்த்து. மிகவும் வறுமையில் ஒரு வேளை உணவிற்காக சோழர்கள் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர் இந்த சோழர்களின் அரசனாக பார்த்திபன் நல்ல மிடுக்காக நடித்துள்ளார். நல்ல கம்ப்பீரம் குரலும் ஒத்துழைக்கிறது ராசாவிற்கு. 


சோழர்கள் இன்னும் பழைய பேச்சுத்தமிழையே பயன்படுத்துகின்றனர். அந்த தமிழ் பெரும்பாலோனருக்கு புரியவில்லை என்பது இயக்குனருக்கு தோல்வியே சப்டைட்டில் போட்டிருக்கலாம். இலங்கைத்தமிழ் பேச்சு வழக்கு போல் இருக்கிறது கேட்க.  


சோழர்களிடம் அகப்படும் மூவரும் சித்திரவதைக்குள்ளாக்கப்படுகின்றனர். அந்த சமயத்தில் ரீமா தான் சோழர்களின் தளபதி உடையார் (என்னமோ பேர் சொல்கின்றார்) அவருடைய மகள் என்று விளிக்கிறார் . சோழர்கள் நாட்டின் பாதுகாப்பிறாக இரண்டு இனங்களில்(உடையார், வெள்ளாளர்) பெரும்பாலும் திருமணம் செய்வதாக படித்துள்ளது ஞாபகம் வந்தது. அரசன் நம்மும்படியாக தன் முதுகில் புலிக்கொடியை தோன்ற செய்து மறைக்கிறார் ரீமா. 
எல்லோரும் அந்த சூழலில் நம்பி ரீமாவை தூதுவனாக ஏற்று கொண்டாடி மகிழ்கின்றர். ரீமா பாண்டிய குல தோன்றல் எனவே சோழர்களை பழிதீர்த்து தெய்வ சிலையை மீட்க இவ்வாறு நாடகம் ஆடுகிறார்.  


ரீமா மீட்டாரா? சோழர்கள் என்ன ஆனார்கள்? கார்த்தி என்ன ஆனார்?  
படத்தின் ப்ளஸ் பாயிண்டுகள்  


* அருமையான லொகேசன்கள் 
* அருமையான கலை இயக்கம் (ஆர்ட் டைரக்சன்)
* நல்ல கேமரா * மிக நீண்ட ஆராய்ச்சி 
* ரீமாவின் மிரட்டும் நடிப்பு  


இந்த படத்தைப்பற்றி பொதுவாக மீடியாக்கள் தூற்றுகின்றன ஏன் என்றே தெரியவில்லை. ஆரம்பத்திலே இது ஒரு கற்பனை நிஜமல்லனு கார்ட் போட்ட பின்பும் ஏன் இன்னும் சோழர்களின் வாழ்க்கை முறை வாழ்ந்த முறையை பத்திரிக்கைகள் அடம்பிடித்து எழுதுகின்றன? ஆங்கில பட்த்திற்கு இனை என்றே இந்த படத்தினை குறிப்பிடலாம் 30 கோடியில் இவ்வளவு பிரமாண்டமான படத்தை சங்கர் கூட நினைத்து பார்க்கமாட்டார்.  


படத்தில் க்ளாமர் அதிகமாக இருப்பதாகவும் ஒரு பேச்சு நிஜம் தான் ரசிகர்களை வறட்சியாக பாலைவனம், பாம்பு என்று போரடிக்காமல் இருக்கவே செல்வா பயன்படுத்திருககர். ஆனாலும் வழக்கமான செல்வா படங்களின் கவர்ச்சி இலக்கணங்கள் இந்த படத்திற்கும் உண்டு.  


அந்த இடத்தை சேர்ந்த உடன் மேலதிக துருப்புகளை பெற ஐபோன் எடுப்பது ஒரு குறையாக சொல்லப்படுகிறது. பழமையையும் புதுமையும் இணைத்துப்பார்க்க முடியாமல் தவிப்பதால் இந்த காட்சிப்பிழை விமர்சகர்களுக்கு. ஹெலிகாப்டரில் வந்து சேரும் உதவிகளை வைத்து நேரடியாகவே இங்கு வந்திருக்கலாமே ஹெலிகாப்டரில் என்று சொல்பவர்களும் உண்டு இந்த இடத்தை கண்டுபிடிச்ச பின்பு தான் இங்கே சோழர்கள் இருக்கின்றர் என்றே அறிய முடிகிறது. 


மைன்ஸ் கொஞ்சம் லாஜிக் மீறல்களே அவையும் மறக்கூடியவைகளே. மொத்தத்தில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தே இந்த படம்.

Friday, January 08, 2010

படத்தொகுப்பு மென்பொருள் - பகுதி -3

பகுதி 1 2
படங்களை முழுவதும் காண படத்தினை க்ளிக் செய்யவும்

சென்ற பகுதியில் கொஞ்சம் அடிப்படை விசயங்களை பார்த்தோம் இந்த பகுதியில் நாம் மேலதிக அடிப்படை கூறுகளை காண்போம்.மேலே உள்ள படத்தினை கவனியுங்கள் இந்த திரை தோன்ற file =>Properties எனும் மெனுவிற்கு செல்லவும். இந்த பிராப்பர்டீஸ் நம்முடைய புராஜக்டின் பண்புகளை தீர்மானிக்கும் திரையாகும். இதிலே நம்முடைய புராஜக்ட்டின் தன்மை , வெளியிடு, உள்ளீடு பற்றிய விசயங்களை சொல்லபோகின்றோம் இந்த விசயங்களை எந்த நேரத்திலும் நம்மால் மாற்ற இயலும் என்பது தனித்தன்மையே வேகாஸில்.

மேலே உள்ள படத்தில் மொத்தம் 5 டேப்புகள் உள்ளன. அவற்றில் முதலில் முதல் இரண்டினைப்பற்றி காண்போம் .

விடியோ எனும் டேபில் சில பண்புகள் குறிக்கப்பட்டுள்ளன.
Template எனும் இடத்தில் combo பெட்டியில் சில பொதுவான புராஜக்ட் டெம்ப்ளட்டுகள் இருக்கும் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம் இல்லையெனில் நமக்கு தேவையானவற்றை நாமே உருவாக்கி சேமித்தும் வைத்துக்கொள்ளலாம் சேமிக்க, அழிக்க இதற்கு அருகிலே பட்டன்கள் இருக்கின்றன.


இந்த டெம்ப்ளட்டுகள் என்ன வேலையை செய்யும் ? நம்முடைய புராஜக்ட் ntsc/pal , stereo/5.1 surround , widescreen , frame rate போன்ற விசயங்களை தீர்மானிக்க உதவுகிறது. இதிலே வகை வகையான டெம்ப்ளெட்டுகள் உதாரணத்திற்கு படத்திலே இருப்பது NTSC DV (720 X 480 , 29.97 fps) அதனுடைய பண்புகள் கீழே உள்ள கட்டங்களில் குறிக்கப்பட்டிருக்கும் , இதே போல நீங்கள் pal பயன்படுத்தினால் அதற்கும் டெம்ப்ளட் இருக்கும்.

குறிப்பு: டெம்ப்ளட்டில் ஒன்றும் , உள்ளீடு/வெளியீடு வேறு வகையாகவும் இருந்தால் வெளியீட்டில் குறை , அதிக நேரம் எடுத்துக்கொள்ளுதல் போன்றவை நேரலாம். அதனால் என்ன வெளியீடு வேண்டும் என்பதை தீர்மானித்து இந்த டெம்ளட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

width , height போன்றவை வீடியோவின் width , height யை குறிக்கின்றன. இதிலும் standard இருக்கு அதாவது படத்திலே உள்ள டெம்ளட்டை கவனியுங்கள் அதில் width , height 720/480 என்று இருக்கிறது இது ஒரு ntsc  டிவிடி அவுட்புட்டுக்கு ஏற்ற அளவு . இல்லை என்னிடம் சோர்ஸ் வீடியோவின் அளவு வேறு மாதிரியாக இருக்கு அதற்கு ஏற்றார் போல செய்ய வேண்டும் என்றால் இங்கு மாற்றம் செய்யலாம் ஆனாலும் எல்லாவற்றிற்கும் குறிப்பிட்ட வகை width , height கள் உள்ளன அவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

PAL Video:

720 x 576 pixels MPEG2 (Called Full-D1)
704 x 576 pixels MPEG2
352 x 576 pixels MPEG2
352 x 288 pixels MPEG2
352 x 288 pixels MPEG1 (Same as the VCD Standard)
25 fps
16:9 Anamorphic (only supported by 720x576)


NTSC (NTSC Film) Video:


720 x 480 pixels MPEG2 (Called Full-D1)
704 x 480 pixels MPEG2
352 x 480 pixels MPEG2 (Called Half-D1)
352 x 240 pixels MPEG2
352 x 240 pixels MPEG1 (Same as the VCD Standard)
29,97 fps
16:9 Anamorphic (only supported by 720x480)இவை தான் ஸ்டாண்டர் அளவுகள் இவற்றையே பின்பற்ற வேண்டும். இதே போல HD க்கு வேறு படும் மேலே உள்ளவை SD க்கு உரியவை.உள்ளே இருக்கும் டெம்ளட்டுகளை பார்த்தாலே நல்ல ஐடியா கிடைக்கும்.


field order - எனும் இடத்தில் video capturing செய்யும் பொழுது என்ன பீல்ட் ஆர்ட்டரோ அந்த பீல்ட் ஆர்டர் கொடுங்கள் இல்லையேல் இண்டர்லேஸ் பிராப்லம் வரும். அதவாது இயக்க சூழலில் படத்தில் தொய்வு, கண் அயர்வை ஏற்படுத்தும் காட்சிகள் உருவாகும். உங்களுக்கு தேவையான ஆர்டரை தேர்வு செய்துக்கங்க கேப்சரிலே.pixel aspect ratio - இதுவும் நம்முடைய புராஜக்ட்டுக்கு ஏற்ற வண்ணம் தேர்வு செய்துகொள்ளலாம். 


out put rotation - இது வீடியோவின் வெளியீட்டில் ரொட்டே செய்ய


frame rate - இதுவும் ஏற்கனவே பார்த்திருக்கோம். ntsc - 29.97 or 23.97 , pal- 25 வை போக HD க்கு வேறுபடும்.


pixel format - 8 bit வீடியோவிலே வைத்துக்கொள்ளுங்கள்32 bit floating point வைக்க வீடியோவினை கேப்சர் செய்த வீடியோ 10-bit yuv யாக இருக்க வேண்டும்.


compositing gamma - 8bit வீடியோவிற்கு 2.222 வைக்க வேண்டும் 32 bit floating point க்கு 1.000 வைக்க வேண்டும்.


full resolution rendering quality - best ல் வைத்தால் தரமான அவுட்புட் கிடைக்கும் இதிலும் சில உள்ளே இருக்கும் வேண்டியதை தேர்வு செய்யுங்கள் தேர்வு செய்வதற்கேற்ப வெளியீட்டின் நேரம் தாமதம் ஆகும்.


 motion blur type - இயக்க நேரத்தில் என்ன வகையான ப்ளர் வேண்டும் என்பதில் எப்பொழுது Gaussian என்பதையே கொடுங்க மிச்சதெல்லாம் (pyramid , box)வீடியோவின் தரத்தை பாதிக்கும் வெளியீட்டில் வீடியோ உடைவது(காட்சிகள்) மங்கலான தன்மை போன்றவை தோன்றும்.


Deinterlace method - ல் none என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள் அதுவே சிறந்த அமைப்பு.Adjust source media to better match project or render settings - இதை தேர்வு செய்தால் வேகாஸ் அதுவாகவே அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் சோர்ஸ் - அவுட்புட்டுக்கு ஏற்ப. Prerendered files folder - இடத்தினை தேர்வு செய்து வைத்துக்கொள்ளலாம். ப்ரீரெண்டர் பைலுக்கு இவ்வாறு வைப்பதன் மூலம் ஒவ்வொரு முறையும் அதனை ரெண்டர் செய்யும் வேலை குறைவு


Free storage space in selected folder - நாம் தேர்வு செய்துள்ள இடம்(சேமிக்கும்) எவ்வளவு காலியாக உள்ளது என்று காட்டும்;


மேலே உள்ள படத்தில் ஆடியோ டேப் திறக்கப்பட்டுள்ளது.

Master bus mode - என்ன வகையான சவுண்ட் பயன்படுத்த (வெளியீடு) போகின்றோம் என்பதை தேர்வு செய்யலாம்.
Sample rate - 44100 , 48000 போன்றவற்றில் எது வேண்டுமோ அதற்கு ஏற்றார் போல தேர்வு செய்துகொள்ளலாம்

bit depth - 8,16,24 மூன்றில் எது வேண்டுமோ அவை number of bits used to store each sample. அதிகமான பிட் ஆழம்  நல்ல தரத்தை கொடுக்கும் அதே நேரத்தில் கொள்ளவு அதிகமாகும்.


Resample and stretch quality - பெஸ்ட் ல் வைப்பது நல்லது. 


Resample and stretch quality - 5.1 சர்ரவுண்ட் தேர்வு செய்திருந்தால் மட்டுமே எனபில் ஆகும் இதிலே 5.1 க்கு ஏற்ற டால்பி , டிடிஎஸ் போன்றவற்றை தேர்வு செய்துகொள்ளலாம்.

நிறைய விசயங்கள் புதுசு என்றாலும் ஆழமாக சொல்லாமல் சொல்லியுள்ளேன் காரணம் அதிகமான விளக்கம் கொஞ்சம் அதிகமான குழப்பத்தை வருவிக்கும் மேலும் இந்த தொழில்நுட்ப சங்கதிகள் தொடர் முடிவடைவதற்குள் நல்ல பழக்கத்திற்கு வந்துவிடும்.

தொடரும்

பிடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க

Monday, January 04, 2010

படத்தொகுப்பு மென்பொருள் - பகுதி -2

பகுதி -  1
எல்லோரும் வேகாஸை தரவிறக்கி நிறுவியாச்சா? நான் உங்களை போர் அடிக்காமல் பாடத்திற்கு கூட்டிச்செல்கிறேன்.

படங்களை முழுவதும் காண படத்தினை க்ளிக் செய்யவும்.

வேகாஸை இயக்க தொடங்குகள்வேகாஸ் இயங்க தொடங்கும் பொழுது இந்த திரை தோன்றி அதனுடைய பதிப்பு , இந்த மென்பொருள் யார் பெயரில் வாங்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களை காட்டி ஓடும்.

பிறகு எல்லாம் லோட் ஆன உடன் பின் வரும் வேலைக்கேற்ற திரை தோன்றும்
மேலே உள்ள படத்தில் ஆங்கிலத்தில் எழுத்துக்களை குறிப்புகளாக கொடுத்துள்ளேன் அவற்றை காண்போம் இப்பொழுது.

மேலே உள்ள திரை தான் நாம் வேலை செய்யபோகும் திரை வேகாஸின் எளிமை இரண்டு படங்களிலே தெரிய ஆரம்பித்துள்ளது.

பொதுவாக இந்த மாதிரியான தொழில் முறை எடிட்டிங் மென்பொருட்களில் இந்த ஸ்டெப்லே நம்மை கேள்வி கேட்டு திண்டாட வைச்சிடுவாங்க. ஆனால் அந்த மாதிரி வேலையெல்லாம் செய்யாம வேகாஸ் உள் நுழைந்துவிடும் இந்த முறை விண்டோஸின் இயக்கு முறை போன்றது எனலாம்.

சரி மற்ற மென்பொருட்களில் ஆரம்பத்தில் என்ன கேட்க்கும்? இந்த கேள்வி நியாயமானதே. பொதுவாக சேமிக்கும் இடம் , நீங்கள் செய்யப்போகும் வேலை(புராஜக்ட்) பண்புகள் பற்றி ஆரம்பத்திலே தீர்மானிக்க சொல்லி கேட்கும். இந்த கேள்விகள் அவசியம் என்றாலும் அந்த மென்பொருட்களில் சாதாரண பயனருக்கு புரியும் படி கேள்விகள் இருக்காது பின், புராஜக்ட் போன்று இருக்கும் எனவே ஒரு புது பயனர் குழம்பிவிடுவார் இல்லை இல்லை பயந்து விடுவார். சரி படத்தில் உள்ள குறிப்புகளை காண்போம்.

A - சில டேப் கள் இருக்கிறது அவைகள் பின் வருவன

1.Project media - நாம் ஒரு புராஜக்ட்டில் இணைத்துள்ள மீடியாக்கள் இங்கு காட்டப்படும், மீடியா என்பவைகள் - வீடியோ,ஆடியோ , இமேஜ் போன்றவைகள்.

2.Explorer - நம்ம விண்டோஸ் எக்ஸ்புளோரர் தான் மீடியாக்களை எளிதில் தேட இங்கே எக்ஸ்புளோரர் இணைக்கப்பட்டுள்ளது.

3.Transitions - இரண்டு வீடியோக்களுக்கு இடையே மாறும் பொழுது கொடுக்க கூட ஒரு வகை இயக்கம் சார்ந்த எபக்ட்டே டிரான்சிசன்ஸ். உதாரணமாக படங்களில்(பழைய) பார்த்திருக்கலாம் ஒரு காட்சி முடிந்து மற்றொரு காட்சிக்கு செல்லும் பொழுது ‘பூ’ வடிவம் அல்லது முக்கோனம் , சதுரம் , இழுத்து விடுதல் போன்ற எபெக்ட்டில் நகரும் இவையே டிரான்ஸிசன்

4.video FX - இது எதற்கு என்றால் இதனை கொண்டு ஒரு வீடியோவில் தேவையான மாற்றங்கள் செய்யலாம் , வண்ணம் , க்ரோமோ கீ , குக்கீ கட்டர் போன்ற நிறைய எபக்டுக்கள் இருக்கின்றன. இவை ஆரம்பத்தில் கேட்க புரியாதது போல் இருக்கும் ஆனால் வேகாஸில் இவற்றை எளிதாக கையாளலாம் என்பது நமக்கு கூடுதல் வசதியே பின்னால் பார்க்கலாம்.

5.Media Generators : இந்த மீடியா ஜெனரேட்டரை கொண்டு நாம் டைட்டில் , பின்புலம் போன்றவற்றை உருவாக்கலாம் இது மென்பொருளிலே உள்ள இன்பில்ட் வசதி .

 மேலே சொன்ன எல்லாம் எளிதில் கையாளும் படி வேகாஸில் இருக்கு இந்த டேப்புகள் தெரியவில்லை எனில் view மெனு சென்று எல்லாவற்றையும் தெரியவைக்கலாம். இவைகளை பற்றி தேவையான பொழுது விளக்கமாக காணலாம்.

B - இது ப்ரிவியூ திரை இதிலே செய்யும் வேலையை இயக்கி ப்ரிவியூ பாக்கலாம் இது ஹார்ட்வேர் சார்ந்து இயங்கும் படியும் செய்யலாம் உங்களுடைய கணினியில் இருந்து வீடியோ அவுட் எடுக்கும் வசதி இருப்பின் அதனை கொண்டு இந்த ப்ரிவியுவை அருகில் உள்ள டிவியில் பார்க்கலாம். இல்லை இரண்டு மானிட்டர்கள் இருந்தால் அதில் ஒன்றை ப்ரிவியூவிற்காக பயன்படுத்தலாம். பொதுவாக இந்த மாதிரி வேலைக்கு இரண்டு மானிட்டர்  ஒரு டிவி வைத்துக்கொள்வது நல்லது.

C - இது ஒலி ஈக்குலைசர் மெதுவாக பார்க்கலாம்

D - வீடியோ/ஆடியோ பான்(pan) மேலே திரையில் காலியாக உள்ளது

E - இது டைம் லைன் இங்கே வீடியோ ஆடியோ லேயர்கள் வைக்கலாம். இதுவும் காலியாக உள்ளது

F - இது ப்ளே கர்சர் அதாவது வீடியோவை சரியான இடத்தில் டைம்லைனில் இயக்கி பார்க்க பயன்படுகிறது

G - இது வீடியோ ப்ளே ரேட் அதாவது 0.00 வில் டீபால்டாக இருக்கும் பொழுது வீடியோ எப்பொழுதும் போல ஓடும் ரேட்டை அதிகரித்தால் வேகமாக ஓடும் குறைத்தால் மெதுவாக ஓடும்.

H -  இது ஒரு ப்ளேயரில் உள்ள ப்ளேபேக் கண்ட்ரோல்கள்

I - இது ப்ளே கர்சர் நிற்கும் இடம் இந்த டீட்டெய்லை வீடியோ/ஆடியோ பான் க்கு மேலேயும் காணலாம்.

சரி இந்த திரையில் எப்படி ஒரு வீடியோ ஆடியோவுக்கான லேயர்களை கொண்டு வருவது பின்வரும் படத்தினை கவனியுங்கள்டைம்லைனில் வைத்து ரைட் க்ளிக் செய்தால் மேலே படத்தில் காட்டியுள்ள படி (பச்சை வண்ணம்) துனை மெனு தோன்றும் அதில்

open - சென்றால் நேரடியாக ஒரு ஆடியோ/வீடியோ/இமேஜ் போன்றவற்றை இனைக்கலாம்

insert audio track -இதை தேர்வு செய்தால் ஒரு ஆடியோ டிராக் தோன்றும்

insert video track - இதை தேர்வு செய்தால் ஒரு வீடியோ டிராக் தோன்றும்

preference - இதை பற்றி பின்னால் பார்ப்போம் அதாவது இந்த வேலை செய்யும் சூழ்நிலை மற்றும் மென்பொருளில் உள்ள வசதிகளை மாற்றி அமைக்க பயன்படுத்தப்படும் அமைப்பே இது. சிம்பிள்ளா விண்டோஸில் பொதுவாக வரும் ஆப்சன்ஸ் எனும் மெனுவை ஒத்தது.
மேலே படத்தில் ஒரு வீடியோ/ஆடியோ டிராக் சேர்க்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது

அடுத்த பகுதியில் சந்திப்போம்.

பிடித்திருந்தால் ஓட்டளிக்கவும்.

Friday, January 01, 2010

படத்தொகுப்பு மென்பொருள் - பகுதி -1

வணக்கம் நண்பர்களே

என்னுடைய முந்தைய தொடரை(தொழில் முறை டிவிடி உருவாக்கம்) ஆதரித்து ஊக்கம் தந்த நண்பர்களுக்கு நன்றி. நான் முன்னரே குறிப்பிட்டிருந்த படி இன்று முதல் ஒளி/ஒலித்தொகுப்பு மென்பொருள் பற்றி காண்போம்.

இன்றைய காலகட்டத்தில் எடிட்டிங் வேலைக்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. அதில் இண்ட்ஸ்ட்ரியல் ஸ்டாண்டர் என்று அழைக்கப்படுவை சில மட்டும். அதில் முன்னிலையில் இருப்பவை இரண்டு மென்பொருட்கள் மட்டுமே.

1.அவிட் புரோ
2.பைனல் கட் புரோ

இவை இரண்டு மட்டுமே பெரும்பாலும் திரைப்பட ரீதியிலான படத்தொகுப்பு மென்பொருட்கள்.

அவிடே இதில் பிராதானம், பைனல் கட் புரோ(FCP) ஆப்பிள் நிறுவணத்தின் தயாரிப்பு எனவே கட்டாயம் ஆப்பிள் கணினி வேண்டும் இயக்க. அவிட் விண்டோஸ்/மேக் கில் இயங்கும் படி உள்ளது.

மேலே சொன்ன இரண்டும் நல்ல மென்பொருட்கள் இன்றைய காலகட்டத்தில் அவற்றிற்கு போட்டியாக சில மென்பொருட்கள் உள்ளன.அவற்றை கொண்டு வெளிநாடுகளில் படத்தொகுப்பும் செய்கின்றனர்.

1.அடோப் ப்ரிமியர்
2.பினாக்கில்
3.சோனி வேகாஸ்
4.எடியஸ்

இதில் முதல் இரண்டு மென்பொருட்கள் உங்களுக்கு முன்னரே பரீட்சயம் ஆகி இருக்கலாம் குறைந்த பட்சம் கேள்விப்பட்டிருக்கலாம். அடோப் நிறுவணத்தின்  மென் பொருளான ப்ரிமியர் தொகுப்பு நம் நாட்டில் கொஞ்சம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது காரணம் ரெம்ப நாளா பீல்டில் அந்த மென்பொருள் இருப்பதால்.

பினாக்கில் நம்முடைய திருமண வீடியோ தொகுப்பாளர்களின் விருப்பமாக இருக்கிறது காரணம் எளிதான முறை ,திருமண வீடியோக்களுக்கு ஏற்ற டெம்ப்ளட்டுகள், எபக்ட்டுகள் போன்றவை.

எல்லா மென்பொருட்களும் ஒன்றே அவை வித்தியாசப்படும் அளவீடுகள் சில முறைகளை சார்ந்ததே. அவை

1. வெளியீட்டு தரம்
2. உள்ளீட்டு முறைகள்
3. புரிந்து கொள்ளும் தன்மை
4. நீட்சிகள்(ப்ளக்கின்) / உதவிகள்

வெளியீட்டு தரம் எல்லா தொழில்நுட்ப மென்பொருட்களிலும் பெரும்பாலும் ஒரே முறையில் இருக்கும். உள்ளீட்டு முறைகள் இன்றைய காலகட்டத்தில் எல்லா மென்பொருட்களும் எல்லா பார்மட்டுகளையும் ஏற்றுக்கொள்கிறது. இந்த கடைசி 2 பாயிண்டுகள் தான் நமக்கு முக்கியம்.

புரிந்து கொள்ளும் தன்மை, அவிட் , fcp போன்றவை புதிய பயனர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையில் இல்லை என்பது உண்மை காரணம் அவற்றின் உயர்வான நிலை. இந்த அவிட் மென்பொருளை பின்பற்றி இடைமுகப்பை (interface)கொண்டுள்ள மென்பொருட்கள் பிரிமியர் மற்றும் இடியஸ். எனவே இவற்றையும் கவனிக்கும் புதிய பயனருக்கு(user) இந்த வகை மென்பொருட்களை கண்டாலே பயம் ஏற்படும்.

நீட்சிகள் என்று அழைக்கப்படும் ப்ளக்கின்கள் பெரும்பாலும் முன்னிலையில் உள்ள நிறுவனங்களுக்கே அதிகமாக கிடைக்கின்றன. அந்த வகையில் அதிகம் காசு பார்ப்பவர் முதல் இரண்டு நிறுவணங்களும் , அடோப்பும் மட்டும். பினாக்கில் இந்த நீட்சிகளின் மூலமாக தான் பொழப்பை நடத்திக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. அந்த வகையில் பினாக்கில் கொஞ்சம் விலை குறைவே. ஒரு யுஎஸ்பி கேப்சர் கார்ட் பினாக்கிலில் வாங்கினாலே போதும் உடனே ஒரு பினாக்கில் மென்பொருள் சேர்த்தே கொடுத்துருவாங்க .

நம்மில் பெரும்பாலோனர் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்து பல குறிப்புகள், மின் புத்தகங்களை படித்து முயற்சி செய்தாலும் சில அடிப்படை தொழில்நுட்ப தகவல்கள் தெரியாததாலும், இடைமுகப்பின் குழப்பமான சூழலும் நமக்கு பெரும் பின்னடைவை தரும் என்று சொல்லுதல் மிகையாகாது.

நான் உங்களுக்கு இந்த தொடரில் தரமான ஒரு தொழில் நுட்ப ரீதியிலான மென்பொருளை பற்றி சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்த மென்பொருளின் தரம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஆங்கிலப்படங்கள் இந்த மென்பொருளில் தொகுக்கப்பட்டுள்ளது(எடிட்) . மேலும் வீடியோ துறையில் ஒரு உலகப்புகழ் பெற்ற நிறுவணத்தின் வெளியீடு. மிக எளிதான் விண்டோஸின் அமைப்பை கொண்ட இடைமுகப்பு இதனை விண்டோஸ்/மேக் இரண்டிலுமே இயக்கலாம். சரி பில்டப் போதும் அந்த மென்பொருளின் பெயர் சோனி வேகாஸ்


ஆம் சோனி நிறுவனத்தின் தயாரிப்பு தான் இந்த சோனி வேகாஸ். சோனி நிறுவனத்தில் இதே போல நிறைய மென்பொருட்கள் வெளியிடப்படுகின்றன. அந்த நிறுவணத்தின் இணையத்தளத்தில் நீங்கள் காணலாம். மேலும் எல்லா மென்பொருட்களுக்கும் இலவச சோதனைகால தொகுப்பு உள்ளது. நீங்கள் தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

இந்த மென்பொருளை தேர்ந்தெடுக்க காரணங்கள்

1.எல்லோருக்கும் பார்த்தவுடன் குழப்பம் ஏற்படா இடைமுகப்பு
2.தொழில் நுட்ப ரீதியிலானது
3.கையாள எளிது

மேலும் என்னுடைய நோக்கம் ஒரு மென்பொருளை கற்பிப்பது அல்ல வீடியோ எடிட்டிங்கை பற்றி சொல்லித்தருவதே அதனை ஒரு எளிய அதே நேரத்தில் தரமான மென்பொருள் கொண்டு விளக்கும் போது உங்களுக்கு எளிதில் புரிந்து கொள்ள முடியும் அதனைக்கொண்டு நீங்க இன்ன பிற மேலே சொன்ன மென்பொருட்களையும் கையாளலாம் எளிதாக.

விருப்பப்படும் நண்பர்கள் இந்த மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள் அடுத்த பகுதியில் இருந்து நேரடியாக மென்பொருளுக்கு செல்வோம்.

தொடரும்....

பிடிச்சிருந்தா ஓட்டும்/ கருத்தும் போடுங்க நண்பர்களே!