Friday, October 30, 2009

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-4

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-1
பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-2
பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-3


மார்சுவாரியில் கிடத்தப்பட்டு தலை அருகே அடிரா என எழுதப்பட்டிருந்த பிரேதம் மருத்துவருக்காக காத்திருந்தது.

காலை 7 மணிக்கே ஸ்பெஷல் ஆர்டரில் வந்திறங்கினான் சிவா, அவனுக்கு முன்பே அயூப் அலைந்துகொண்டிருந்தான். நட்பு புண்ணகையை கூட மறந்து இருவரும் ஹலோ சொல்லி அவரவர் வேலையை பார்க்க தொடங்கினர்.

அடிரா ஆறடிக்கும் மேல் உயரம் யூதர்களுக்குறிய அந்த பிடிவாதம் இறந்த பின்னும் முகத்தை இறுக்கி வைத்திருந்ததை காட்டுவதாய் நினைத்தான் சிவா.

உடம்பு சல்லடையாக சலிக்கப்பட்டிருந்தது துளைகளை பார்க்கும் போதே எம் 240-பி என்று தெரிந்தது. 400 டாலருக்கு விற்கப்படும் அந்த அமெரிக்க தயாரிப்பு இந்த கொலையை செய்துவிட்டு முதலாளியுடன் சென்றுவிட்டது.

அடிராவை அறுத்துப்பார்த்ததில் கிடைத்த முடிவை பட்டியலிட்டான்.

1.இதயத்தின் இடது வெண்டிரிக்கிள்ளை ஒரு தோட்டா வாடகைக்கு எடுத்துக்கொண்டதால் இதயம் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது.

2.உடம்பில் பல இடங்கிள் குண்டடிபட்டிருப்பதால் அதிகப்படியான ரத்தம் வெளியேறியும் மரணம் ஏற்பட்டிருக்கலாம்.

3.தாக்கப்பட்ட தடயங்கள் இல்லை.

4.இறந்து 3 மணி நேரம் இருக்கும்.

இன்னும் பல வழக்கமான சோதனைகளின் முடிவை எடுத்து வைத்து அறிக்கையை போலிஸிடமும் மேலதிகாரியிடமும் ஒப்படைத்து கிளம்பிவிட்டான் அடிராவின் மூளையோடு.

வெளியே வந்த சிவாவை பார்த்து லேசாக தலையாட்டினான் அயூப் இவனும் பதிலுக்கு யாரும் அறியா வண்ணம் ஆட்டி சென்றான் மூளையோடு.

மாலை 7 மணி சிவாவின் இல்லம்

டெல்-அவிவ் ல பிறந்து யுஎஸ் ல ஆராய்ச்சி படிப்பு முடித்துள்ளான் அடிரா.
இன்னும் திருமணம் ஆகவில்லை இரண்டு முறை காதல் தோல்வி.

….................

கறுப்பு டொயோட்டா க்ளாடினாவை கண்டவுடன் சலாம் போட்டு கதவை திறந்தான் கூர்க்கா. மிகவும் இயல்பாக காணப்பட்டான். காரியம் நடக்கனும் இல்லைனா காரியம் முடிக்கனும் இது தான் அடிராவின் அறிவுக்கு தெரிந்தது.


அடிராவின் சேட்டிலைட் போன் அலறியது

“Erev Tov adira” மாலை வணக்கம் அடிரா

“Erec Tov Boss” மாலை வணக்கம் தலைவரே

“Ma nishma ? “ எப்படி இருக்க

“Tov ,toda” நல்லா இருக்கேன் ,நன்றி

”நீங்க எப்படி இருக்கீங்க தலைவரே”

”நலமே , உனக்கு சொன்ன வேலைய மட்டும் முடிக்காம இப்ப நீ சிக்கலில் இருக்க”

”சிபிஐ யை சரிகட்டியாச்சு பாஸ்”

”முட்டாள் காக்கிகளை மறந்துட்டு செய்திகளை மட்டும் கவனிக்கிற”

அதிர்ச்சி கோடுகள் அடிராவின் மூளையில் , தவறு செய்துவிட்டதை உணர்ந்த வேளையில்

“slih'a adira, Tzeth'a leshalom , LeHitra'ot Adira......” மன்னித்து விடு , அமைதியில் உறங்கு ,சென்று வா அடிரா..............

முடிக்கும் போதே எங்கிருந்தோ வந்த எம் 240 பி யின் தோட்டாக்கள் சல்லைடை போட்டு அடிராவின் உயிரை தேடியது.

தொடரும்...

Tuesday, October 27, 2009

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-3

பகுதி-3- அயூப் ஆஜர்
பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-1
பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-2சென்னை சிபிசிஐடி அலுவலகம்

பிரதமரின் தேர்த்தல் பிரச்சாரம் பற்றிய பாதுகாப்பு சம்பந்தமான கூட்டம்.

“இந்த நேரத்துல மினிஸ்டர் மர்டர் நமக்கு கூடுதல் டென்சன்” - சிபிசிஐடி ஐஜி ராமச்சந்திரன் தன் சகாக்களிடம் வருத்தப்பட்டார்

”மிஸ்டர் அயூப் நீங்க மினிஸ்டர் கேஸை தனிப்பட்ட முறையில ஐ மீன் வெளில தெரியாத அளவுக்கு விசாரிங்க , கேஸ் சிபிஐ க்கு போகும் இருந்தாலும் மர்டர் நடந்தது நம்ம ஸ்டேட்ங்கறாதால நாம கொஞ்சம் கவனம் செலுத்துவோம் ”

“எஸ் சார்” - கம்பீரமாக சல்யூட் வைத்தார் அயூப்

அடுத்த வருஷம் ஓய்வு பெறும் ராமச்சந்திரனின் இடத்தை நிரப்ப இருப்பவர் அயூப். 1995 ல ஐபிஎஸ் முடிச்ச ரெம்ப துடிப்பான அதிகாரி.

”கேஸ் டீட்டெய்ல் வாங்கிகங்க மினிஸ்டர் பாடி இன்னும் ஜிஹெச் ல தான் இருக்கு” - ஐஜி சொல்லும் போதே அயூப்பின் போன் அதிர தொடங்கியது

”எக்ஸ்க்யூஸ்மி சார்” - சொல்லிட்டு ஓரம் கட்டினார் அயூப்

”எங்க சார் இருக்கீங்க” – போனில் சிவா

”மீட்டிங்ல இருக்கேன் மச்சான் நான் அப்புறமா கூப்பிடுறேன்”

”கொஞ்சம் அவசரம் …. ஒக்கே ஈவ்னிங் ப்ரியா பேர்த்டே பங்சன் இருக்கு அங்க வந்துடு பேசிக்கலாம் 8 ஓ க்ளாக் பங்சன் ஓக்கேவா” - சிவா முடிக்க

”ஏதும் அவசரமா , ஓக்கே ஈவ்னிங் பாக்கலாம் தானே”

”ஓக்கே மச்சான் வந்திரு” சிவா சொல்லி இனைப்பை துண்டித்தான்

சிவா - அயூப் சிறுவயது முதல் நட்பு வெவ்வேறு பணியில் இருந்தாலும் வாரம் ஒருமுறை சந்தித்துக்கொள்ளும் பால்ய சிநேகிதர்கள்.


”மாலை சரியா 4 மணிக்கு பிஎம் மீட்டிங் தீவுத்திடலில் இதுவரைக்கும் எந்த அசம்பாவிதம் இல்லை நமக்கு வந்த ரிப்போர்ட்டும் திருப்திகரமாகவே இருக்கு, எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருப்போம் டேக்கேர் மிஸ்டர் அயூப்” - எழுந்து சென்றார் ராமச்சந்திரன்.

அயூப் தன் சகாக்களுடன் கூட்டத்தை தொடர்ந்தார்.

மாலை 8.30 சிவாவின் இல்லம்

பிறந்தநாள் கலை கட்டியிருந்தது. ப்ரியா குட்டி தேவதையாய் ஜொலித்தாள் அந்த பிங்க் நிற ஆடையில். ஆளாளுக்கு அள்ளி முத்தமிட்டனர்.

சிவாவும் - நிம்மியும் வந்தவர்களை வரவேற்று உபசரித்துக்கொண்டிருந்தனர்.

அயூப் தன் மனைவி நிலோபருடன் பார்மல் சூட்டில் விழாவிற்குள் நுழைந்தார்.

வரவேற்பு , கேக் வெட்டுதல் எல்லாம் முடிந்த பிறகு சிவா-அயூப் தனியாக நகர்ந்தனர்.

”என்னடா அவ்வளவு அவசரம் ஏதும் ப்ராப்ளமா” -அயூப்

”ம், இதை படி ”- சிவா ஒரு 20 பக்க ப்ரிண்ட் அவுட்டை தூக்கி தந்தான்


”ஹாய் அடிரா ஹவ் ஆர் யூ மேன் ”

”ஐ’ம் ஆல் ரைட் மினிஸ்டர் ஜி”

வாசகர்களுக்காக தமிழில் உரையாடல்

”என்னய்யா என்ன இந்த பக்கம்”

”உங்க கிட்ட சொன்னது என்னாச்சு”

”நான் தான் எல்லாத்தையும் கொடுத்துட்டேனே ”- மினிஸ்டர் இயல்பாய் சொன்னார்

”நீங்க கொடுத்தது எல்லாமே கண்ணுக்கு தெரிஞ்சது” - அடிராவின் சகா குதித்தான்

சைனா காரனோ மினிஸ்டர் சிந்தித்தார்

அந்த சைனா காரனை கையமர்த்தி அடிரா தொடர்ந்தான்

”நான் கேட்டது இது இல்லை ஜி, எங்கே அணு ஆயுதம்லாம் செய்யுறீங்க எங்கே சேமிச்சு வச்சிருக்கீங்கனு”

”என்னோட பவர் இந்த எல்லை வரைக்கும் தான் போகும் அடிரா” - மினிஸ்டர் கையை விரிச்சார்

”அப்ப ஏன் எங்க கிட்ட பொய் சொன்னீங்க, சும்மா இல்லை தில்லை ஒன் மில்லியன் யுஎஸ் டாலர் உங்க பேருல கிரெடிட் ஆயிருக்கு சுவிஸ்ல தெரியும் தானே” குரல் உயர்த்தினான் அடிரா

”எனக்கு புரிய்து அடிரா.... , அணு ஆயுதம் எல்லாம் எங்க மினிஸ்ட்ரி கவனத்துக்கே வருவதில்லை அது ஒரு தனிப்பட்ட விங்க்ஸ்ல இருக்கு. எனக்கு தெரிஞ்சு ரா ல சில அதிகாரிங்க , சில உயர்மட்ட ராணுவ அதிகாரிங்களுக்கு மட்டுமே தெரிஞ்சிருக்கு நானும் சிலரை சரிகட்ட பார்த்தேன் முடிய......”

கையில் இருந்த பெரிய இயந்திர துப்பாக்கியால் கையில் ஒரு போடுட்டான் அவன் சகா அவன் பங்குக்கு மார்பில் ஒரு மரண அடி அடிக்க அடங்கிப்போனார் தில்லை. ஆனாலும் வெரியடங்காம பிஸ்டலை எடுத்து 3 தோட்டாக்களை தில்லைக்கு பரிசாக தந்துவிட்டான் அடிரா.

ஆங்கில கெட்டவார்த்தைகளால் அர்ச்சனை செய்தான் அடிரா

இந்த உரையாடலை படிச்ச அயூப் முகச்சுருக்கத்துடன்

”எப்ப மச்சான் கதை எழுத ஆரம்பிச்ச”

”ஹே இது நிஜம் டா” என்று சொல்லி தன் ஆராய்ச்சி பற்றி விளக்க அயூப் வாய் பிளந்தான்

”ஓக்கே இந்த ஆதாரத்தை நான் எடுத்துக்கலாமா?”

”இப்போதைக்கு வேண்டாம் இந்த முயற்சிய நான் இன்னும் வெளி உலகிற்கு சொல்லல , இதை வேர்ல்ட் வைட் அப்ரூவல் வாங்கிய பிறகு தான் இந்த ஆதாரம் ஏத்துக்கப்படும் அதுக்கு எப்படியும் 2 வருஷம் ஆகலாம்.”

”மினிஸ்டர் கேஸை நான் தான் டீல் செய்யுறேன்”

”சிபிஐக்கு மாத்திடதா சொன்னாங்க சிபிஐ வந்து டீட்டெய்ல் கேட்டாங்க”

”ஆமா, ஆனாலும் சென்னைல நடந்ததால ஐஜி ஸ்பெசலா விசாரிக்க சொல்லிருக்கார்.”

”அயூப் இன்னொரு இன்பர்மேசன் , அடிரா பேரு வித்தியாசமா இருந்ததால கொஞ்சம் சர்ச் பன்னுனேன் அடிரானா ஹூப்ருல ஸ்ட்ராங்னு அர்த்தம்”

”ஹூப்ருவா....”

”ஜீஸஸ் பேசுன லாங்குவேஜ் , இப்ப யூதர்கள் பேசுற மொழி, பைபிள் முதலில் எழுதப்பட்ட மொழி , கடவுளின் மொழி என்று யூதர்களால் நம்பப்படுவது...”

”அப்ப அடிரா ஒரு jew ஆ...”

”ஆமா அப்படித்தான் நினைக்குறேன் ”

”ம்... மொசாட்டை சேர்ந்தவனா இருக்கனும், இதுல சீன kgb பங்கு இருக்கும் போல...”

”ஓக்கே சிவா நான் கிளம்புறேன் டயம் ஆச்சு, தேங்க்ஸ் பார் யுவர் இன்பர்மேசன் ”

”என்னோட ஆராய்ச்சி வெளியேறாம பாத்துக்கோ”

அயூப் விடைபெற்று வெளியேற அயூப்பின் சாண்ட்ரோவை ஒரு கறுப்பு டொயட்டோ க்ளாடினா வெளிநாட்டு கார் பாலோ செய்ய ஆரம்பித்தது.

தொடரும்...

Saturday, October 24, 2009

மாலை நேரத்து மயக்கம்கசங்கிய நாள்
கடைசி துளி பகல்
கிளை தேடும் பறவைகள்
மங்கிய மஞ்சள் ஒளி
கசங்கிய மேகம்
வீட்டுக்கு போகும் சூரியன்
எட்டிப்பார்க்கும் நிலா
குளிப்பாட்டும் தூறல்
விடுதலை(பள்ளியிலிருந்து) பெற்ற குழந்தைகள்
அனைத்தும் சலிப்பூட்டுகிறது
உனக்காக காத்திருக்கும்
இந்த ஒரு நிமிடம்

விரைவில்.....

அன்று சென்ற அதே சாலையில்
இன்றும் சென்றேன்
என்றோ பதியப்பட்ட நிகழ்வு
இன்றும் என்னுள்(டன்) பயணித்தது
நடந்து செல்லும் பாதங்களின்
சப்தங்களில் உன்னை தேடுகிறேன்
மறந்துவிட்டேனோ?
தேடும் படியாக
ஆகிவிட்டதா நம் காதல்...

தத்தி தத்தி நடக்கும் குழந்தைபோல்
நம் காதல் மீண்டும் ஆரம்பித்தது
சில இடங்களில் விழுந்தாலும் எழுந்து நடந்தது
அன்று போல் யாருக்கும் பயமில்லை இன்று
நீயும் கூட பயப்படவில்லை ஆச்சரியம் தான்

ஒவ்வொரு முறையும் உனை நினைக்கையில்
நீ காட்டிய ஜாடைகள் தான் வந்து செல்லும் என்றேன்
வலிக்கும் வண்ணம் ஒரு அறை விட்டாய்
நிலைகுழைந்தேன் எதிர்பாரா தாக்குதலில்
வலியுடன் ஏனென்று ஏறெடுத்துப்பார்க்கையில்
அதே கோபம் குறையாமல் கேட்டாய்
"தினமும் எண்ணிக்கை முறையில் தான் நினைக்கிறாயா" என்று
சிரிப்புடன் வாங்கிகொண்டேன் உன் மற்றொரு அறையையும்
பிறகு கிடைக்கும் முத்ததிற்காக

என்றோ நடந்தவைகளை இன்றைய செய்தி போல் வாசித்தாய்
நானும் ரசித்தேன் செய்தியையும் செவ்விதழ்களையும்
ஒவ்வொரு நிகழ்விற்கும் ஓரு கவிதை சொன்னாய்
சில நிகழ்வில் நம் காதல் மலர்ந்ததை நினைத்து வருத்தப்பட்டேன்
உன் கவிதைகளுக்காக
பேசினாய் பேசினாய் நீ மட்டுமே
நான் பலவிசயங்களுக்கு ரசிகனாகிப்போனேன் உன்னிடம்

நேரம் குறையத்தொடங்கியதும் அதே குழந்தை தனம் உன்னிடம்
செல்ல வேண்டும் என்பது மட்டும் ஒலிபரப்பினாய்
அது கூட அழகாய் இருந்தது

இறுதியாய் நீ கேட்ட கேள்வி
மீண்டும் எப்பொழுது வருவாய் ?
எப்பொழுது என்னுடன் முழுதாய் வருவாய்?

உன்னிடம் உதிர்த்த பதில்கள் உரக்க ஒலிக்கிறது
விரைவில்.....

கவிதை

நம்பிக்கை:

நேற்று வரை
இருந்தது
சென்ற நொடி காணாமல்
போனது
நிச்சய திருமணத்தில்...


நாணயம்

இருந்தாலும் மதிப்பில்லை
இல்லாவிட்டாலும் மதிப்பில்லை


நட்பு

அறிந்து கொள்வது அறிவு
தெரிந்து கொள்வது தெளிவு
பகிர்ந்து கொள்வது பண்பு
புரிந்து கொள்வது நட்பு

சாபம் 2

மழையில் நனைந்தால்
காய்ச்சல் வந்ததுண்டு - இன்றோ
காதல் வந்துவிட்டதடி

கர்வத்துடன் வெளிப்படுத்திய எனக்கு
கவலை தோய்ந்த
கடைக்கண் பார்வையே
கடைசியில் கிடைத்தது

கண்டதும் காதல்
கடைசி வரை நம்பவில்லை
உனை காணும் நொடி வரை

நேற்றோடு நாற்பது நாட்கள்
விழியின் விதியில் வீழ்ந்து
ஞாபகப்படுத்தினாய்
எனக்கென்னமோ நாட்களில்
நம்பிக்கை இல்லை

சட்டென மண்டியிட்டு
மன்னிப்பு கோரினேன்
என்னவென்று பதறினாய்
தாமதமாய் உனை
கண்டதற்கென்றேன்
கண்ணடித்து

காதலுக்கு கண்ணில்லையாம்
காதலை காணதவன் சொன்னது
பிறகெப்படி கண்ணீர் வந்தது

சாபம்எத்தனை ஆண்டு தவமோ
கதறிக்கொண்டு உன் வீட்டு
தாழ்வாரத்தில் விழுகிறது
மழை

மழை நீரில் கை நீட்டாதே
உன் மீது பட்ட துளிகள்
மூச்சை இழுத்துக்கொண்டு
குமிழியாய் அலைகிறதாம்

குமிழிக்கு சாப விமோசனம் தர
நீ கால் நனைக்கும் அழகில்
எனக்கேற்பட்டதடி
காதல் சாபம்

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-2

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-1


”டாடி எனக்கு என்ன பேர்த்டே கிப்ட்”- மழையில் கேட்டாள் ப்ரியா

”சாரிடா செல்லாம் மறந்துட்டேன் காலையில வாங்கிடலாம்”

கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மகளின் நெற்றியில் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினான்.

சமையல் அறையிலிருந்து வெளிப்பட்ட நிர்மலா

”இன்னைக்கு சினிமா போவோமா பேராண்மை கொஞ்சம் நல்லா இருக்காம்” - சூர்யா ரசிகை ரவிக்கு சர்ட்பிகேட் கொடுத்தாள்

”சாரிம்மா இன்னைக்கு அந்த மினிஸ்டர் கேஸ் அதுல கொஞ்சம் அனாலசிஸ் இருக்கு சோ முடியாது லேப்ல வேலை”

”மினிஸ்டர் கிட்டயே சுட்டாச்சா ”- கண்ணடித்து நகர்ந்தாள் குக்கரின் விசிலுக்கு.

தன்னுடைய பெர்சனல் லேபிற்குள் நுழைந்தான் சிவா. அவன் கண்டுபிடிச்சு வச்சிருந்த ஒரு இன்ஸ்ட்ருமெண்ட் - மெத்தேட் யை செயல்படுத்த நல்ல தருனம் கிடைத்ததில் மகிழ்ச்சியில் திளைத்தான்.

அவனோட கண்டுபிடிப்பு இது தான்

“இறந்தவங்களோட மூளையில் பதிவாயிருக்கும் தகவல்களை சேகரிக்கலாம் , அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த மர்மம், அவர் எப்படி இறந்தார் , இறப்பின் போது நிகழ்ந்தவை என்ன? , சொத்தைக்கூட எப்படி பிரிக்கனும்னு நினைச்சார்னு கண்டுபிடிக்கலாம்”

சரி இது எப்படி சாத்தியம் அதுக்கு சிவா கண்டுபிடிச்ச வழி

“மூளையின் தகவல்களை பெற ELECTRO ENCEPHALO GRAPHY மற்றும் MAGNETO ENCEPHALO GRAPHY முறைகளை மூலம் தகவல்களை சேகரிக்க முடிந்தது ஆனால் அவற்றை படிக்க இயலாதபடி ஒரே சங்கேத தகவல்களாக கிடைத்தது. இந்த குறையை தீர்க்க நிறைய இரவுகளை தின்று தீர்த்தன சிவாவின் மூளை அப்பொழுது தான் அவனுக்கும் இந்த யோசனை ஸ்பார்க் ஆச்சு. மூளையில் உள்ள மொழி புரிதலுக்கான பகுதிகளை(BROCA'S AREA AND WERNICKE'S AREA) இந்த தகவல்கள் இனைந்து வந்தால் மொழி புரிதல் கிடைக்கும் தகவல்கள் படிக்கும் வகையில் கிடைக்கும் என்பதே அவனது கண்டுபிடிப்பு”


தில்லையின் மூளையை எடுத்து அட்டகாசமாக அவன் செய்த கருவியில் இனைத்தான் எலக்ட்ரோ போல்கள் மூலம் வெளியாகும் தகவல்கள் மொழி புரிதல் ஏரியாவிலிருந்து ஒரு சிறிய சிப் மூலம் கடத்தப்பட்டடு வெளியேறி கையடக்க கணினியில் பதிவாகும் படி செய்யப்பட்டிருந்தது.

தன்னுடைய குலதெய்வத்தை நினைத்து பேட்டரியை இயக்கினான். அவனுடைய ஆராய்சி வீண் போகல. கிடைத்த தகவல்களை ஏகப்பட்டவை அவற்றை ஸ்பெசலாக செய்த ஒரு டாக்குமெண்ட் ரீடருக்கு கன்வெர்ட் செய்தான். பக்கங்கள் லட்சங்களை தாண்டி சேவ் ஆகிக்கொண்டிருந்தன.

அனைத்து தகவல்களும் முடிய நள்ளிரவை தாண்டியது. ஒருபக்கம் மகிழ்ச்சி இன்னொரு பக்கம் ஆச்சரியமும் கேள்விக்குறியும். இவ்வளவு தகவல்களை எப்படி படிப்பது ஒருங்கினைப்பது என்ற கேள்வி எழுந்து அவனை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியது.

யோசனை வந்தவனாய், கணினியில் சிறிய மாற்றங்களும் மேக்னடிக் ப்ளேட்டில் பொருத்தப்பட்டிருந்த சிப்பில் சிறிய ரக புரோகிராம் மாற்றி பதிந்து கொண்டான். மீண்டும் தகவலை மூளையிலிருந்து இறக்க ஆரம்பித்தான். நீண்ட நேரத்திற்கு பிறகு மகிழ்ச்சியில் திளைத்தான் சிவா. எல்லா தகவலும் நாட்கள் , நேரம் உள்பட தோன்றியது . சிப்பில் செய்த மாற்றம் முடிவுறும் நேரம் , தேதியை இன்று அதிகாலை 2.55 க்கு நிர்ணயித்தான் அதிலிருந்து நாட்களை , நேரத்தை கணக்கிடும் புரோகிராமை லிங் செய்து இந்த சாதனையை முடித்தான்.

கிடைத்த டேட்டாவை மேம்போக்காக படித்தான் தில்லை பற்றி

1.பிறந்தது ராமநாதபுரம் அருகில் உள்ள மண்டபம்
2.படிச்சது எம்ஏ. பிஎல்
3.செய்ய தூண்டிய கொலைகள் 7
.
.
.
.
.
.
இப்படி நீண்டது.

மரணம் சம்பவித்தது எப்படினு படிக்க இறுதி அத்தியாயங்களை நோக்கினான்....

தொடரும்...

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-1

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-1

பாகம் - 1 – தில்லையின் மூளைஇவரோட வலது முன்னங்கை உடைஞ்சிருக்கு சோ எதிர்ல இருந்து தாக்கியிருக்கனும் மேலும் எலும்பு மோசமா நொறுங்கியிருக்கு அதே நேரத்துல ஒரே ஒரு நேர்கோட்டுல மேல் பக்கவாட்டுல நொறுங்கியிருக்கு அடிக்க பயன்படுத்திய ஆயுதமும் ஆளும் ரெம்ப பலமானதா இருக்கனும். அடிச்ச வேகத்துல சதையில கொஞ்சம் சிக்கியிருக்கும் உலோகதுகள்களை பாக்கும் போது ஏதோ பழைய பைப் கொண்டு தாக்கியது போல இருக்கு எதுக்கும் அந்த திசுக்களை சோதனைக்கு அனுப்பி முடிவை பார்த்துக்கலாம்.

கொலை செய்தவன் கைதுப்பாக்கி பயன்படுத்திருக்கான். அவன் பெரிய கொலை வெறி பிடிச்சவனாக இருக்கனும் காரணம் புல்லட்டால் இவர் இறக்கவில்லை அதுக்கு முன்னமே இறந்துட்டார் அவர் மேல் உள்ள வெறுப்பை வெளிப்படுத்த இந்த 3 புல்லட்டுகளும் இதயத்தை ஒன்னு , இடது கிட்னியை லேசா உரசி ஒன்னு , கழுத்திலே ஒன்னுனு தொகுதி பிரிச்சிக்கிட்டன ஒரு வேளை மத்திய மந்திரி என்பதால் புல்லட்டுகளும் தொகுதி வரியா இறங்கிருக்குமோ.

தன் சகாக்களிடம் இந்த ரிப்போர்ட்டை விளக்கி கொண்டிருக்கும் அந்த கண்ணாடி போட்ட 40 வயசை 4 நாளைக்கு முன்னால் எட்டி பிடிச்ச சிவப்ரகாசம். சென்னை பாரீஸில் உள்ள அரசு பொது மருத்துவமனைல வேலை , போஸ்ட்மார்டம் செய்வதில் பலே கில்லாடி. அவனோட கணிப்பு எப்பவும் கவனிக்க மறந்ததில்லை. கிறிஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இந்த பிரேத பரிசோதனை பழக்கத்தை உலகின் பழமையான் தொழில்னே சொல்லலாம்.

அவனுக்கு ஒரு தனிப்பட்ட ஆராய்ச்சி கூடம் இருந்தது வீட்டிலே அதிலே மூளை (brain autopsy ) பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறான். அந்த ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்குமேனு தான் அவன் இந்த பிரேத பரிசோதனை யை விரும்பி ஏற்று செய்கிறான்.

சிவப்ரகாஷம் எம்பிபிஎஸ், எம்.எஸ் , அண்ணா நகரில் வீடு , மனைவி பெயர் நிர்மலா அவளும் மருத்துவரே ஆனா வேலை பாக்குறது சென்னை யின் பிரபல தனியார் மருத்துவமனையில் நியுராலஜி நிபுணர். இரண்டு குழந்தைங்க ரெண்டும் பெண் என்பதில் சிவாவுக்கு சந்தோசம் நிம்மிக்கு கொஞ்சம் வருத்தம். மூத்தவள் நிஷாவுக்கு 9 வயது 4வது படிக்கிறாள், இளையவள் ப்ரியா சமீபத்திய வெளியீடு நாளைக்கு தான் முதல் பிறந்த தினக்கொண்டாட்டம்.

பேக் டூ ஹாஸ்பிடல்...

குளிரில் நடுங்காமல் வீராப்புடன் இருக்கும் மத்திய அமைச்சர் தில்லைநாயகத்தை பார்த்தான். பாதுகாப்புத்துறை இனையமைச்சர் சகல மரியாதையுடன் டெல்லியில் வலம் வரும் தமிழக அமைச்சர்களில் ஒருவர் தொகுதி தென் மாவட்டத்தில் ஒன்று என்றாலும் சென்னை-டெல்லி ப்ளைட்டில் எப்பொழுதும் டிக்கெட் இருக்கும். மனுசன் பயங்கரமான கஞ்சன் நிறைய பிசினஸ் இருக்கு. ஒரே பையன்.

இன்று அதிகாலை சரியாக 2.55 க்கு கொல்லப்பட்டிருக்கிறார் தில்லை. கொடூரக்கொலை அவ்வளவு பாதுகாப்பு உள்ள பாதுகாப்புத்துறை இனைஅமைச்சரின் மரணம் அரசை ஆட வைத்துள்ளது.

ஒரு நிமிட மன ஓட்டத்திற்கு பின் இந்தாளோட மூளையை எடுத்துப்போய் வீட்ல உள்ள லேப்ல சோதிக்கனும்னு முடிவெடுத்தான் சிவா. ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மூளையை அகற்றி தன் தொழில் சாதுர்யத்தை காட்டினான். பார்மலினில் மூளையை குளிக்க வைத்து தன்னுடைய பேக்கினுள் தள்ளினான்.

பிணவறை காவலாளியிடம் தன் அனுமதியில்லாமல் எந்த ப்ரேதத்தையும் வெளிச்செல்லக்கூடாது என்று கடுமையுடன் கூறிவிட்டு தன்னுடைய ஹோண்டா சிவிக்கை உசுப்பினான் சரியாக 30 நிமிடத்தில் வீட்டை அடைந்த்தான்.

தொடரும்...

Monday, October 19, 2009

பேராண்மை - விமர்சனம்

இயக்கம் : எஸ்.பி.ஜனநாதன்
இசை:வித்யாசாகர்
தயாரிப்பு: ஐங்கரன்
நடிப்பு : ‘ஜெயம்’ ரவி , வடிவேலு , ஊர்வசி , வசுந்தரா , சரண்யா , வசுந்தரா , தனுஷிகா , லியாஸ்ரீ மற்றும் பலர்.

கல்லூரி மாணவிகள் தங்களுடைய என்.சி.சி பயிற்சிக்காக ஒரு கல்லூரிக்கு வருகின்றனர். அதில் 5 பேர் கதையின் நாயகிகள். அவர்களுடைய பேராசிரியராக ஊர்வசி. அந்த கல்லூரியின் வார்டனாக வடிவேலு. அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பாரஸ்ட் ரேஞ்சராக துருவன் என்னும் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி. அவருடைய மேலதிகாரியாக பொன்வண்ணன்.

துருவன் மலைவாழ் மக்களில் படித்து முன்னேறிய ஓர் இளைஞன். மாணவிகளில் 5 பேருக்கு அவருடைய தாழ்ந்த நிலை பிடிக்கவில்லை அதை வைத்து அவரை டீஸ் செய்கின்றனர். அதில் ஒருவருக்கு (சரன்யா) துருவன் மேல் காதல் ஏற்படுகிறது.அந்த 5 மாணவிகளையும் தனிப்பயிற்சிக்காக காட்டினுள் அழைத்து செல்கிறார் துருவன். ஒரு மாணவியின் துடுக்கு தனத்தால் பாதை தவறி காட்டினுள் அகப்பட்டுக்கொள்கின்றனர். அப்பொழுது அவர்களுக்கு , இந்திய செயற்கோள் ஏவுவதை தடுக்க ஒரு அயல்நாட்டு கும்பல் முயலுகிறது அதை தடுத்து எவ்வாறு செயற்கோளை காத்தார் என்பதே கதை.

மாடர்ன் மாணவிகள் என்பதற்காக பெண்களை இப்படி காட்சிப்பொருளாக்கியிருக்க வேண்டாம். 5 பெண்களையும் குறைவான உடையில் அலையவிட்டுவிட்டார் இயக்குநர். அதிலும் அருவி பாடலில் ரெம்ப மோசம். அதைவிட மோசம் அவர்களின் உரையாடல். மார்டனை காட்ட வேண்டும் என்பதற்காக இப்படியா?
பெண்கள் அடிக்கும் லூட்டி நமக்கு களைப்பு ஏற்படுத்தவில்லை என்பதை ஒத்துக்கதான் வேண்டும்.படத்தில் ஏகப்பட்ட இடங்களில் நீளமான வாய்ஸ் சென்சார், அதில் பெரும்பாலும் மலைவாழ் மக்களை மேலதிகாரியும் மாணவிகளும் கிண்டல் செய்யும் வசனங்களாக தெரிகிறது.

முதல் காட்சியிலே கோவணத்துடன் நிற்கிறார் ரவி. உடலை முறுக்கேற்றி அட்டகாசமாக இருக்கிறார் இந்த சாக்லேட் பாய். நல்ல உழைப்பு தெரிகிறது. பெண்களும் , மேலதிகாரியும் எவ்வளவு தான் டீஸ் செய்தாலும் அதை பணிவோடு எதிர்கொள்ளும் நடிப்பு இயல்பாக உள்ளது. சபாஷ் ரவி உங்க கேரியரில் ஒரு நல்ல படம் இது.

காட்டிற்குள் செல்லும் பெண்களுக்கு ஆயுதங்களுக்கு பற்றி அறிமுகம் அளிக்கிறார் நல்ல தமிழில் ரவி மூலமாக இயக்குநர் நமக்கும் அது அறியும் வகையில் உள்ளது. இந்திய ராக்கெட்டை அழிக்க வரும் கும்பலின் தலைவனாக ஹாலிவுட் நடிகர் ரொனால்ட் நடித்துள்ளார். அதிகமாக பயன்படுத்தவில்லை என்றே தோனுது.

காட்டிற்குள் நடக்கும் இறுதி சண்டையில் அதிகமாக சிஜி பயன்படுத்தப்படிருக்கு ஆனாலும் அந்த காட்சி ஏதோ தாறுமாறாக இருப்பது போல் இருக்கிறது.

வசனங்களில் சாட்டையடி

“படிக்கலைனா தான் அடிப்பாங்க இவங்க படிச்சாலே அடிக்கிறாங்க” மலைவாழ் சிறுவன் சொல்வது

“இந்த மலையையும் ரியல் எஸ்டேட் போட்டிங்களா” மலைவாழ் ஒருவர்

“தமிழனோட வீரத்தை உலகமே பாக்குது” ரவி சொல்வதாக புலிகளை நினைத்து

நிறைய சமதர்ம, பொருளாதார கருத்துக்கள் வசனங்களா இருக்கிறது.

5 பெண்களை வைத்துக்கொண்டு ஒரு 16 பேர் கொண்ட அதிநவீன ஆயுதங்கள் கொண்ட டீமை அழிப்பது நம்ம வியப்பை அளித்தாலும் அதற்கான ஆரம்ப சண்டை நல்ல லாஜிக் உடையது.

படத்தில் எல்லாமே போதிக்கப்படுவது போல் இருப்பதும் கொஞ்சம் போர் அடிக்கிறது. பாடல் படத்திற்கு தேவையில்லை என்றாலும் அந்த சதானசர்ஹம் பாடல் இனிமை. காட்டுப்புலி அடிச்சு பாடலும் சமதர்ம கருத்தோடு வருகிறது.

கடைசியாக ரவியின் உழைப்பை நயவஞ்சக மேலதிகாரி திருடி பட்டம் வாங்குவதாக காட்டியிருப்பது சூப்பர்ப்.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கனும். இருந்தாலும் பல இடங்களில் நல்ல ஆங்கிலப்பட த்ரில் இருந்தது உண்மை. இவாறான கதை எல்லோருக்கும் பிடிக்குமா என்பது மற்றுமொரு கேள்விக்குறி. எனக்கு பிடிச்சிருந்தது,

பேராண்மை - சிவப்பாய் மிளிர்கிறது.
நன்றி

Friday, October 16, 2009

ஆதவன் - திரை விமர்சனம்

இயக்கம் : கே எஸ் ரவிக்குமார்
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
நடிப்பு : சூர்யா , நயன்தாரா , வடிவேலு , சரோஜா தேவி

வளர்ப்பு தந்தையிடம் கூலிப்படையா இருக்கிறார் சூர்யா(ஆதவன்). லோக்கலில் ஆரம்பிச்சு இண்டர்நேஷனல் லெவல் மர்டர் வரை முடிக்கிறார் சூர்யா. குழந்தைகளை கொன்று உடல் உறுப்புகளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்யும் கும்பலை கண்டுபிடிக்க அமைக்கப்படும் ஒரு நபர் கமிஷன் நீதிபதியாக மறைந்த மலையாள நடிகர் முரளி. அவரை கொல்லும் அசைன்மெண்ட் சூர்யா அன் கோவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவரை கொல்ல சூர்யா செய்யும் முயற்சிகளே கதை.

முரளியை காலிசெய்ய அவரது வீட்டிற்குள் நுழைய வடிவேலுவை பயன்படுத்தி ஒரே நகைச்சுவை கலாட்டா தான். கொஞ்ச நேரத்துல யாரு ஹீரோனே தெரியாத அளவுக்கு வடிவேலு படம் முழுக்க வந்த அமர்க்களப்படுத்துகிறார். முரளியின் தங்கை மகளாக நயந்தாரா. வழக்கம்போல பாடலுக்கும் கவர்ச்சிக்கும் தொட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். நல்லவேளை கவர்ச்சியை குறைத்துள்ளார். ஆனாலும் பாக்க சகிக்கல வேற ஹீரோயினை தேடுங்கப்பா தமிழ் இயக்குநர்களே. முரளியின் அம்மாவாக சரோஜாதேவி, அதே இழுத்து பேசும் தமிழ் நம்மைத்தான் பாடாய் படுத்துது.

சூர்யாவை வளர்க்கும் அப்பாவகா சாயாஷி ஷிண்டே அவரைப்பார்த்தாலும் காமெடி தான் தோனுது. அவரின் மகனாக ஆனந்த் பாபு(நாகேஷ் மகன்). நெடுநாளைக்கு பிறகு ஆரம்ப பாடலில் தன்னுடைய நடனத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

முரளியை கண்டவுடன் அவர் தான் தன்னுடைய அப்பா என்று அறியும் சூர்யா அவரை காக்க முயற்சிகள் மேற்கொள்வது செம லாஜிக் மீறல். அதைவிட கொடுமை கடைசி சண்டைக்காட்சி வில்லு, குருவி விஜயை தூக்கி சாப்பிடும் அளவுக்கு காதில் பூ. முடியல....

கே.எஸ்.ரவிக்குமார் படமென்றால் சகல மசாலாக்களும் இருக்கும் என்பது அறிந்ததே அதிலும் இந்த படத்தில் மசாலா ஓவர் டோஸ். செலவு பெருசா ஒன்னுமில்லை. ஒரு குடும்பம் நிறைய கல்கத்தா சாரி கொல்கத்தா என படம் நகர்கிறது. ஒரு பெரிய நட்சத்திரப்பட்டாளமே இருந்தாலும் சிலருக்கு ஒன்லைன் வசனங்களோடு நிறுத்திவிட்டார். எல்லோரையும் பேசவிட்டா மெக சீரியல் ஆயிடுமோனு.

10 வயது சூர்யாவாக நடித்திருக்கும் காட்சிகள் கிராபிக்ஸ் கலக்கல் நல்லா செய்திருக்காங்க.

60களில் எம்ஜிஆர் , 70களில் ஜெய்சங்கர் , 80 களில் ரஜினி,கமல் , ரீசண்டா விஜய் போன்றோர் நடித்த அதே பழைய கதை காதில் பூ சுற்றும் வேலை. விஜய் யாக முயற்சிக்கிறார் சூர்யா. நல்லா தானே போய்கிட்டு இருந்தது ஏன் இப்படி சூர்யா தயவு செய்து கதைகளில் கவனம் செலுத்துங்க.

படத்தின் இரண்டு ஆறுதல் 1. சூர்யா - பின்னி பெடல் எடுக்கிறார் சகலமும் வருகிறது மனுசனுக்கு நல்ல நடிகன் அவர். 2.வடிவேலு - அய்யா உங்க ரவுசு தாங்க முடியல.

ஹாரீஸ் இசையில் இரண்டு பாடல்கள் இனிக்கிறது.

மொத்ததுல ஆதவன் ஆயிரம் கைகள் மறைக்கப்பட்டுள்ளான்.

நன்றி
மணி

Thursday, October 15, 2009

கருப்பு டவுசர் போட்டவ

தீபாவளிக்கு ரெண்டு நாளைக்கு முன்னே தானே நம்ம பர்ச்சேஸ்லாம் ஒண்டிக்கட்டைக்கு அதுல ஒரு சுகம் இருக்குங்க. பொண்டாட்டி புள்ளைனு ஆயிட்டா அடிச்சி புடிச்சி ரெண்டு வாரம் முன்னமே போகனும் அந்த தொல்லை இல்லைங்க. அப்படிதான் இந்த தீபாவளிக்கும் முருகேஷ் கூட போயிட்டு கையில பைகளின் அலங்காரதோட வந்தோம்.

அப்பார்ட்மெண்ட் கீழ இருக்கும் கடைல டீ குடிக்கலாம்னு உக்கார்ந்தோம்.

“மாப்ள அங்க பாருடா...” முனகினான் முருகேஷ்

“யாருடா அந்த கருப்பு டவுசரா”

“ஆமாடா ஏரியாவுக்கு புதுசா இருக்கு செம குட்டி ல”

“டேய் ஏண்ட்டா இப்படி அலையுற கால காலத்துல கல்யாணம் செய்யுடானாலும் கேக்க மாட்டேங்குற”

“மச்சான் உன் கச்சேரிய நிறுத்து இதுலாம் வயசுல அனுபவிக்கனும், பாரேன் செவ செவனு இருக்கா”

“கருமம் டா பாக்க சைனிஸ் மாதிரி இருக்கா சப்பை மூக்கு, சராசரி உயரம் போதாக்கொறைக்கு போந்தா கோழி கனக்கா இருக்கா என்ன டேஸ்ட்டோ”

“டேய் வந்த இடத்துல இருக்குறத ரசிக்கனு, அத விட்டுடு நம்ம நேட்டிவிட்டிய தேடுறவன் வேஸ்ட், நாய்க்கறி திங்குற ஊருல நடுக்கறி நமக்கு தான்னு முந்தனும்” பெரிய தத்துவம் சொல்லிவிட்டு அவளை நோட்டம் விட்டான்.

அவள் எங்களுக்கு முன்னால் மேசை என்பதால் திரும்பி ஒரு லுக் விட்டு சிரிச்சிட்டே டீ குடிச்சா.

“ஆமா என்னமோ புரிஞ்ச மாதிரியே சிரிக்குறா” இது நான்

“மச்சான் எல்லாம் என்னைப்பார்த்து தான் டா”ஜொல்லினான் முருகேஷ்

”கிளம்பு , கிளம்பு” முருகேஷ் அவசரப்படுத்தினான் , என்னனு பார்த்தா கருப்பு டவுசர் கிளம்பி லிப்ட்க்கிட்ட போயிட்டா.

சரினு போனா லிப்ட் வரும் நேரத்திலும் நம்ம பய சும்மா இருக்கல

“கட்டுனா இவளைக்கட்டனும் டா...” பாட்டு வேற

அவள் சிரிப்போடு இருந்தாள்

லிப்டில் 3 பேரைத்தவிர யாரும் இல்லை எங்க கையிலோ புல்லா பேக்ஸ் அவ எங்களை பார்த்தா எந்த ப்ளோர்ங்ற கேள்வியே அவள் பார்வைக்கு அர்த்தம்

“தேர்ட்டீன்” முருகேஷ் முந்த

“பதிமூனா” அவள் மறுமொழியிட்டாள்

அங்க மூடுனவன் தான் முருகேஷ் வாயை தொறக்கலியே அடுத்த 15 நிமிசத்துக்கு

கவிதை

என்
நிர்வாணம்
பிடிக்கவில்லையோ
மருகுகிறது
அருவியில்லா மலை

****************

எதை
தொலைத்து விட்டது
திரும்ப திரும்ப
தேடுகிறதே

கடிகார முள்

****************

ஒரு நாள்
பறிக்க மறந்தாலும்
தற்கொலை
செய்து கொள்கிறது

அவள் வீட்டு ரோஜாப்பூ

*****************

தினசரி நடக்கிறது
சூரிய கிரகணம்
என் நிலாப்பெண்
வெயிலில் நடக்கையிலே

*******************

தயவு செய்து
கருணைக்கொலை
செய்துவிடு
உன் பொல்லாக்காதல்
எனைக்கொல்கிறது

திருமணம்

***********

Wednesday, October 14, 2009

நேத்திக்கடன்

வேப்பமரத்துல கட்டிருந்த ‘கறுவாயன்’ யை உத்துப்பார்த்துக்கிட்டு இருந்தான் சரவணன். அங்க வந்த அப்பத்தா கிட்ட கேட்டான்

“நாளைக்கு எனக்கு ஏன் மொட்டை போட போறோம்”

“போன வருசம் நீ மேலுக்கு சுகமில்லாம இருந்தீல அதான் அய்யா... “

“அதுக்கு இப்ப என்ன...”

“சொல்லிமுடிக்குறதுக்குள்ள அவசரக்குடுக்கபயலே” செல்லமாக சொன்னார் அப்பத்தா

“அப்ப உங்க அம்மா நேந்துக்கிட்டாளாம்”

”எந்த கோயிலுக்கு அப்பத்தா”

“நம்ம கொலசாமிடா , நம்ம கிழக்கு வயக்காட்டுக்கு மேற்கால போனா வரும்ல அந்த கோயிலுதான்”

“பெருசா மீசை வச்சிக்கிட்டு இருப்பாரே பயமுறுத்துறாப்ல...”

“டேய் கருப்ப சாமியை அப்படி சொல்லக்கூடாது, நம்ம காவ தெய்வம்”

“நைட்டு ஆனா அந்த பக்கம் விடமாட்டுறாங்களே ஏன்?”

“சாமி நடமாட்டம் இருக்கும்டா குறுக்க போக கூடாது, கோபப்பட்டு கறுப்பு அடிச்சிடும்” வாயை நெளிச்சு சுழிச்சு அப்பத்தா சொல்லும் போதே பய ஆட்டம் கண்டான்.

“சாமிக்கு என்ன அப்பத்தா வேலை”

“கருப்புவை கும்பிடுற நம்ம பங்காளி, சாதி சதனத்தையெல்லாம் குறையில்லாம காக்குறவரே அவருதான்”

”சரி அப்பத்தா, எனக்கு சுகமில்லைனு மொட்டை போடுறது சரி நம்ம கெடாவுக்கு என்ன நடந்துச்சு அத ஏன் பழிகொடுக்க போறோம்?”

அவனே தொடர்ந்தான்...

“சாதி சனத்தையும் சொந்ததையும் மட்டும் காக்குறவரு கடவுள் இல்லை பாரபட்சம் இல்லாமல் காக்குறவர் தான் கடவுள்னு எங்க டீச்சர் சொல்லி தந்தாங்க ,கோபப்பட்டு அடிக்கிறது எப்படி காக்கும் கடவுளா இருக்கும்”

“கருவாயனுக்கும் மொட்டை போட்டு திரும்ப கொண்டு வந்திடுலாம் அப்பத்தா”

“அடப்ப்போடா போக்கத்த பயலே....” திட்டிக்கிட்டே அப்பத்தா ந்கர்ந்தார்

கிராமத்துக்காதல்

மனசில்லாமல் மருகி தவிக்குறேன்
மகராணி மனசு புருஞ்சு

ஒத்தையடிப்பாதையில் போனாலும்
ஒத்தப்பனை போல ஒய்யாரமா
ஒம்மொகந்தேன்

கொலுசோட கொழுவச்சிருக்கும் மணி போல
கெரண்டை காலுல எனை கட்டி
ஒரண்டை இழுக்கிறா

மனசில்லாமல் மருகி தவிக்குறேன்
மங்கைய தான் மறக்கமுடியாம
மந்தியாகிட்டேன்

கேட்ட சேதிக்கு பதில் சொல்ல
குதிக்குதடி எம்மனசு
தாவாரத்து மழைத்தண்ணி போல

படிச்சு படிச்சு தேஞ்சு போன கடுதாசி
பல நாளைக்கு தூக்கத்த கெடுக்குமடி

பல்லுவெளக்க கூட மறந்துட்டேன்
பச்சைக்கிளி ஒன்னெனப்புல

இத்தனையும் சொல்லி
பயபுள்ள பவிச காட்டுது
பாழாப்போன காதல்