Tuesday, January 18, 2011

அவளுக்கு ஒரு கடிதம்

கண்ணுக்குள் வந்து செல்லும்
கானல் நீராய் நீ இருக்க

தொட்டனைத்து நீ இட்ட சபதங்கள்
சம்பிரதாய பேச்சாக

ஏன் என்று காரணம் சொல்லக்கூட
விரும்பாமல் நீ இருக்க

உனக்கென வாழ்வேன் இல்லையேல்
என்றவளை காணவில்லை

எங்கேயும் தேடிப்பார்த்தேன்
என்னில் ஏதும் தவறா என்று

மென் தவறுகளின்றி வேறொன்றும் இல்லை
ஊடல் இல்லா காதல் எங்கேனும் உண்டா?

வாய்க்கு வந்த காரணங்களை வசை பாடிய
உன்னைக்கண்டு அழுவதா சிரிப்பதா

நித்தம் நித்தம் பேசிய தொலைபேசி கூட
கேலியாய் எனை பார்க்குதடி

மறப்பதற்கு மனது ஒன்றும் பட்ட மரம் அல்ல
உன்னால் நான் நிற்கின்றேன் கல் பட்ட மரமாய்

ஊரறிய உனக்கு நான் எனக்கு நீ என தெரியும்
உதறி தள்ளி ஒய்யாரமாய் நீ இருக்கிறாய்

கசங்கிய சேலையும் கால் கொலுசுமாய் எதிர்கால 
பேச்சுக்கள் கூட கசங்கி போனதடி

உனக்கு வேண்டியவற்றை நான் எப்பொழுதும் மறுத்ததில்லை
என்னிடமே கேட்டிருக்கலாமே?

விருப்பமில்லை விருப்பமில்லை என்று அலற்றி 
காரியம் சாதித்துக்கொண்டாய் 

கனவோடு பேசிய பேச்சுக்கள் நித்தம்
தூக்கத்தை கெடுக்கின்றன

ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் கூட 
நிம்மதியாய் நான் இருந்திருப்பேன்

உனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டாய்
எனையும் கொன்றுவிட்டுச் சென்றிருக்கலாமே

கல்லால் ஆனதா உனது இதயம் 
கண்ணீரோடு கானல் ஆகின்றேன்

No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்